பக்கம்:மாபாரதம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

169

மாறிவிட்டது; அவன் பாட்டுப் புதிய ராகத்தில் அமைந்து விட்டது.

கிருட்டினன் தூது

அக்கால ஐ. நா. பாதுகாப்புச் சபையின் தலைவனா கிய துவரைக் கோமான் போரைத் தவிர்ப்பது தம்கடமை எனக் கொண்டான். துரியனிடம் நேரிடைப் பேச்சு நடத்துவது தக்கது என்று நினைத்தான். இது குறித்துத் தருமனின் கருத்தைச் சொல்லுமாறு கேட்டான்.

தருமன் தன் கருத்தைக் கூறத் தொடங்கினான்.

“போர் என்பது விரும்பத்தக்கது அன்று; எனினும் சர்வாதிகாரிகள் திணிக்கும் போது கைமுடங்கி நாம் எப்படி அடங்கி இருக்க முடியும்? நஞ்சு என்பதால் அஞ்சிச் சும்மா இருக்க முடியுமா? அதனை நீக்க நன்மருந்து தேட வேண்டும்” என்றான் தருமன்.

“போர் புரியும் வகையே அரவுயர்த்தோன் உரைத்தி ருக்கிறான். அதற்கேற்ப நம் செயல் அமைதல் வேண்டும். மூன்று வழிகள் இருக்கின்றன. இமயமலையில் குளிர்ந்த மலைச்சாரலில் குடிசை வேய்ந்து தவம் என்ற பேரால் கண்மூடிக் கொண்டு இருக்கலாம்; அன்றி முறைப் படி தாயபாகம் கேட்டு அவன் தடை எதுவும் இன்றி “அன்புச் சகோதரர்களே வம்பு தும்பு வேண்டாம் ஆட்சி தருகிறேன்” என்றால் நீங்கள் அரசு கட்டில் ஏறி அரம்பை போன்ற அழகியர் கவரி வீசக் காற்று வாங்கிக் கொண்டு அதிகாரம் செய்யலாம். அவன் அதற்கு இசையாவிட்டால் மண்ணுக்காகப் போர் செய்து புகழ்மாலை சூட்டிப் பின் உரிய பாகத்தை அடையலாம்: இவற்றுள் எது உங்களுக்கு விருப்பம்?” என்று கேட்டான் கண்ணன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/172&oldid=1048225" இலிருந்து மீள்விக்கப்பட்டது