பக்கம்:மாபாரதம்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

171


“நாட்டு ஆசையால் நாம் கேட்டுத் தாழ்ந்தோம் என்ற பெயர் நமக்கு வேண்டாம்; நிதானம் கருதி நின்று விட்டோம் என்ற நிலைமையும் வேண்டாம்; மானம் பெரிது; நாட்டில் பாதி; அது தவிர்த்தால் ஊர்கள் ஐந்து; அதுவும் மறுத்தால்போர் தொடுத்துத் தகர்ப்பது அல்லால் விடிவு வேறு வழியில்லை” என்றான். தொடர்ந்து வீமன் இடிபட உரையாடினான்.

“வேத்து அவையில் பாஞ்சாலி கண்ணனை ஏத்தி ஒலமிட்ட நாள் வெகுளாதீர் என்று பேசி எங்களை அடக்கி வைத்தான்; அந்தப்பழிச்சொல் தீர இன்னும் பகை முடிக்க வழி காணத் தயங்குகின்றான். அரவு உயர்த்தவன் கொடுமையைவிட அறம் உயர்த்தும் என் தமையனின் அருளுக்குத் தான் அஞ்சுகிறேன்”.

“காட்டுக்கு எம்மை அனுப்பிய அக்கண்ணிலான் செல்வமகனை வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன். முடி சூட்டி முதல்வனாக என் தமையனை ஆக்கி வைக்கிறேன்” என்றான் தொடர்ந்து.

தன் தமையனின் செயல்படாத தன்மையைச் சாடி. வீடுமன் அங்கதச் சொற்களில் மேலும் அடுக்கினான்; “போர் முடித்தான்; பாஞ்சாலியின் கரிய கூந்தலை முடித்துக் கொடுத்தான். இளையவர் கூறிய வஞ்சினங்களைச் செயல் படுத்தினான். இவனைப்போல் இதுவரை யாரும் முடித்துத் தந்தது இல்லை” என்று இகழ்ச்சியாகக் கூறினான்.

“அண்மையில் வரும் சமரில் எதிர்த்துத் துரியனை இருகூறாய் ஆக்கி வென்று அரசாள்வதை விட்டு அறமும் உறவும் கொண்டாடிப் பணிந்து இருந்து புவி கேட்க விரும்புகிறான்; அடிமைத்தனம் அழகிது” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/174&oldid=1041239" இலிருந்து மீள்விக்கப்பட்டது