பக்கம்:மாபாரதம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

173

அறத்தைப் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? பாம்புக்கு அமுதம் தந்தாலும் அது நஞ்சைத்தான் கக்கும்” என்ற கருத்தை உரைத்தான்.

நகுலன் அதிகம் பேசவில்லை; நாலு வார்த்தை சொன்னாலும் அவை நறுக்கென்று இருந்தன.

“தூது, அறவுரை, பகைவர்பால் இரக்கம், இவை அறநெறிச்சாரம், போர்தான் முடிந்த வழி” என்று பரி செலுத்துவதில் தேர்ந்தவனாகிய நகுலன் தான் அறிந்தது கூறினான்.

சகாதேவன் அறிவு மிக்கவன்; அனைத்தும் அறிந்தவன். அடக்கம் அவனை அமரருள் சேர்த்து இருக்கிறது. மற்ற வர்களைவிட அவன் மாறுபட்டுப் பேசினான்.

கண்ணன் நடத்துவது நாடகம் என்பதை அவன் நன்கு அறிந்தவனாகக் காணப்பட்டான்.

“உன் மனக்கருத்து எதுவோ அதுவே என் மனக்கருத்தாகும்” என்று பட்டும் படாமலும் பேசி முடித்தான். பிழைக்க வழி தெரிந்தவனாகக் காணப்பட்டான். அவனைத் தனியே அழைத்து நீ விரும்பும் என் மனக் கருத்து யாது?” என்று கேட்டான். “நீ பாரதப்போரில் யாரையும் விட்டுவைக்கப் போவதில்லை; படு சாம்பல் ஆகப் போகிறது இந்த பாரதகளம்: பூபாரம் தீர்ப்பதற்கு நீ முடிவு செய்து விட்டாய். இதுதான் உன் மனக்கருத்து” என்றான்.

“பாராளக் கன்னன்; இகல் பார்த்தனை முன் கொன்று அணங்கின்
காரார் குழல் களைந்து காலில் தளை பூட்டி
நேராகக் கைப்பிடித்து நின்னையும் யான் கட்டுவனேல்
வாராமல் காக்கலாம் மாபாரதம்” என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/176&oldid=1041481" இலிருந்து மீள்விக்கப்பட்டது