பக்கம்:மாபாரதம்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மாபாரதம்

பண்டு இருந்த பகைவர்பால் ஊர் கேட்டு உண்டு இருந்து வாழ்வதற்கே பேசுகிறீர்; இது மானமுள்ள பேச்சாகப்படவில்லை” என்றான்.

கண்ணன் அதற்கு மேல் வாதங்களை நீட்டிக்க விரும்பவில்லை; அன்புத் தங்கையை அரவணைத்து ஆறுதல் கூறினான். கவலைப்படாதே உன் மகன் அபிமன்யு இருக்கிறான்; வீரமகன் அவன் வஞ்சினத்தை முடித்துக் கொடுப்பான்” என்று உறுதி கூறினான்.

தருமன் அவைக்கண் அத்துமீறல் சட்டம் காட்டி அமுது அனையவளை அடக்கி வைத்தான். பெண் அவையில் பேசுவது அனுமதிக்க முடியாது என்றான்.

“துன்று பிணியோர், துறந்தோர், அடங்காதோர், கன்று சினத்தோர், கல்லாதவர், மகளிர் என்றும் இவர் அரச ஆலோசனை மண்டபத்தில் எய்தப் பெறாதாரே” என்று கூறிப் பெண்கள் ஆலோசனை மண்டபத்தில் அனு மதிக்கத் தக்கவர்கள் அல்லர் என்று அறிவித்தான்.

இன்று அப்படிப் பேசி இருந்தால் பெண்கள் கொடி பிடித்துக் கூட்டம் கூட்டிக் கூக்குரல் இட்டு இருப்பார்கள். சமநீதி வழங்காத காலம் அது. அதனால் இவ்வாறு பேச முடிந்தது.

கண்ணன் தூது போவதற்கு இசைந்து படைகள் சில பின் தொடர அந்தினாபுரி அடைந்தான். கண்ணன் வருகிறான் என்பதை அறிந்து அரவு உயர்த்தோன் சாலைகளில் குழிகள் தோண்டி வைத்துப் போக்கு வரத்துக்கு இடையூறு செய்தான். தேர்கள் ஒழுங்காகச் சாலைகளில் போகாதபடி மாற்று வழிகளில் திருப்பி விட்டு நெரிசல் நிலையை உண்டு பண்ணினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/179&oldid=1042550" இலிருந்து மீள்விக்கப்பட்டது