பக்கம்:மாபாரதம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

177


துரியன் எடுப்பார் கைப்பிள்ளையாகிவிட்டான். தடுப்பார் தடுத்துத் தடை செய்ய முடியாமல் செயல்பட்டான். அந்தஸ்தை இடையில் வைத்து அரசன் மகனை அடி யெடுத்து வைக்காமல் செய்தான் சகுனி.

“மன்னன் மகன் நீ; மாடு மேய்க்கும் சின்ன குலத்தவன் அவன்; நீ சென்று வரவேற்பது இந்த பாரத மண்ணில் இல்லாத பழக்கம். உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற உத்தமமான பேதம் இருக்கும் வரை அதை நீ காப்பாற்றித்தான் தீரவேண்டும்” என்றான்.

மாமன் சொல்வதிலும் மதிப்பு உண்டு என்று அதிகார பூர்வமான அழைப்புத்தர மறுத்து விட்டான். அவையிலே சென்று அவன் வருகைக்காக முன் சென்று காத்திருந்தான். மன்னர்கள் கூடி இருந்தனர் கொலுப் பொம்மைகளாக.

இதற்கு இடையில் வில் விதுரன் இல் நோக்கி வரவேற்பு இல்லாமல் உள் நுழைந்தான் துவரைக் கோமான். எதிர்பார்க்கவில்லை; ஆனால் எதிர் கொள்ளத்தயங்க வில்லை. வந்தவன் கருமுகில்வண்ணன் நெடுமால் என்பதை உணர்ந்து விதுரன் பக்தியில் ஆழ்ந்தான். ‘என்ன மாதவம் செய்தது இச்சிறு குடில்’ என்று நாத்தழும்ப நாரணனைப் பாடி வரவேற்றான்.

“முன்னமே துயின்று அருளிய பாற்கடலோ! ஆதி சேடன் ஆகிய படுக்கையோ! பச்சையாலிலையோ, நால் வகைச் சுருதியோ! நீ இங்கு வருவதற்கு என்ன மாதவம் செய்தது இச்சிறுகுடில்!” என்றான்.

கண்ணனுக்கும் அவனுடன் வந்திருந்த தானைப் பெருவீரர்களுக்கும் நல்விருந்து நல்கினான்.

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/180&oldid=1048231" இலிருந்து மீள்விக்கப்பட்டது