பக்கம்:மாபாரதம்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

மாபாரதம்

தாக்கித் தான் அங்கேயே மாண்டிருந்தால் பாரதமே வேறு விதமாக மாறி இருக்கும். அறிவாளிகள் என்றுமே அரசி யலுக்குப் பயன்பட மாட்டார்கள். என்பதற்கு அவன் விதி விலக்கு ஆகவில்லை. கடமையிலிருந்து தப்பித்துக் கொள்ள அவனுக்கு வழி கிடைத்தது. விதுரன் விலக்கப் பட்டான்.

குந்தியின் மனையில் கண்ணன்

வெளியுலக வேதனைகள் எதுவும் இன்றி வேந்தன் அரண்மனையில் புகலிடம் சென்ற பாண்டவரின் அன்னை குந்தியைக் கண்ணன் சென்று சந்தித்தான். கானுறை மைந்தர் தம்மைக் கண்ணுறக் கண்டது போல் அவள் மகிழ்ச்சி கொண்டாள்.

“வந்தது ஏன்?” என்று நேர் உரை கேட்டாள். நடந்தது கூறினான்; நடக்க இருப்பது பற்றிப் பேசினான்.

அமர் வந்தால் அவள் தமர் என்ன ஆவார் என்பதை எடுத்துச் சொன்னான். அவள் பெற்ற முதல் மகன் கன்னன்தான் என்பதைச் சுட்டிக் காட்டினான்.

“நாளை நடக்கப் போகும் போரில் கன்னனும் காளை அருச்சுனனும் போர் முனையில் மோதப் போகின்றனர். இருவரில் ஒருவர் சாவது உறுதி. அருச்சுனனோடு மற்ற நால்வரும் மாளுவது திண்ணம். இச்செய்தியைச் சொல்லி ஒருவனையா ஐவரையா யாரைப் பலியிட விரும்புகிறாய்?” என்று கேட்டான்.

அழுவதைத் தவிர அறிவுள்ள கருத்து எதுவும் சொல்ல இயலவில்லை. ஒருவன் கதிரவன் மகன்; மற்றவன் இந்திரனின் மகன். இருவரில் யாரை இழப்பது? அதனைத் தன்னால் முடிவு செய்யமுடியாமல் கலங்கி நின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/185&oldid=1044865" இலிருந்து மீள்விக்கப்பட்டது