பக்கம்:மாபாரதம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

மாபாரதம்


அதற்குள்ளாகத் துரியனின் அவையில் கூடிப்பேசி துரிதமாகத் திட்டங்கள் தீட்டப்பட்டன.

கண்ணனைத் தீர்த்துக் கட்டுவது என்பது பற்றி வேர்த்துக் கொட்டிய துரியன் ஒரு கூட்டத்தைக் கூட்டினான். வீடுமனைத் தவிர மற்றைய பேடிகள் அங்குக்கூடிப் பேசிக் கண்ணனைக் குழி தோண்டிப் புதைப்பது என்று முடிவு செய்தனர். சகுனியும் துச்சாதனனும் இதில் பெரும் பங்கு ஏற்றனர்.

தனித்து வந்திருக்கும் கண்ணனை உண்டு இல்லை என்று பார்த்து ஒரு முடிவு செய்துவிட்டால் பின் தொடர்ந்து செயல்பட எந்த மண்டுவும் வரமாட்டான். அதனால் அவைக்கு அழைத்து அவனுக்கு வேட்டு வைத்தியம் தருவதே பாடம்; அதுவே படிப்பினை” என்றான் துரியன்.

“புலி வலையில் பட்டால் விடுவரோ வேட்டுவர் ஆனோர்; அழித்து அழிவு காணச் சேனைகளை ஏவுக” என்றான் குருட்டுத் தந்தை திருதராட்டிரன்.

இருட் டில் தோன்றிய ஒளி விளக்கு என்று கூறும்படி நாட்டுக்கு இப்படி நல்லவர்கள் உதிப்பதும் உண்டு என்பதைக் காட்டத் துரியனின் கடைசித் தம்பி விகர்ணன் இதைத் தடுத்துப் பேசினான். தூதுவனைக் கொல்வது தவறு என்பதைச் சுட்டிக் காட்டினான்.

“மூத்தவர், இளையோர், வேத முனிவர், பிணியின் மிக்கோர், தோத்திரம் மொழிவோர். மாதர், தூதுவர் இவர்க்கு ஊறு செய்யார்” என்று சாத்திரம் காட்டிப் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/187&oldid=1044867" இலிருந்து மீள்விக்கப்பட்டது