பக்கம்:மாபாரதம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190

மாபாரதம்


“கடையில் வைக்கும் அங்காடிப் பொருள் அல்ல அவை; அங்கதேசத்து அதிபதி அவன்; அவன் பிறக்கும் போதே உடன் தோன்றியவை. அவை இரவி தன் மகனுக்கு விரும்பி அளித்தவை. அவற்றை இரந்து நீ பெற்றால் இருள் அவனை வந்து சூழும். அவன் ஒளி நீங்கும். அவனை எளிதில் உன் மகன் வெல்வான்” என்றான்.

“அந்தண வடிவத்தில் சென்று கேட்டால் எதுவும் கூறி மறுக்கான்; கேட்ட அதற்காக உன்னை வெறுக்கான்” என்றான்.

முதிய வடிவம் கொண்டு உதய குமரனிடம் பிச்சை கேட்கச் சென்றான்.

கொடுத்துச் சிவந்தவை அவன் கைகள்;அடுத்து இவன் கேட்ட போது தடுத்துப் பேச அவன் நா எழவில்லை.

“கேள் நீ; எனக்குக் கேள் நீ” என்றான். “கவசமும் குண்டலமும் போட்டுப் பார்க்க விரும்பினேன். ஒளி மிக்க அணிகள் மணிகள் அவற்றைக் கேட்டுப் பெற வந்தேன்” என்றான்.

“இல்லை என்ற சொல்லை எப்படி எழுதுவது என்பது மட்டும் நான் கற்கவில்லை” என்றான்.

“தருகிறேன்” என்று நீர்த்தாரை வார்த்துக் கொடுத் தான். வானத்து அசரீரி குரல் எழுப்பித் தடுத்துப் பார்த்தது. “வந்தவன் அந்தரத்து அரசன் இந்திரன்” என்றும், “அடுத்துக் கெடுக்க அணுகியுள்ளான்” என்றும் குரல் எழுப்பியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/193&oldid=1048238" இலிருந்து மீள்விக்கப்பட்டது