பக்கம்:மாபாரதம்.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

மாபாரதம்


“வம்பு நீ சொல்வது; அவர்கள் தரும் ஆட்சியை என் நண்பனுக்குத் தந்து அவன் அடியில் வைத்து விழுந்து காணிக்கை யாக்குவேன். அதுதான் நடக்கும்” என்றான்.

“ஆகுவது ஆகுங்காலத்து ஆகும்; போகுவது யார் தடுத்தாலும் போகும்; காலம் கடந்துவிட்டது, ஞாலம் எப்படி இயங்கும் என்று கூற முடியாது. வேறு எதுவாயினும் கேள்” என்றான்.

தேள் கொட்டியதுபோல் இருந்தது; வாள் கொண்டு போழ்ந்த நெஞ்சத்தில் குருதி சிந்தத் தான் சொல்ல வந்த செய்தியைச் செப்பினாள். அதற்கு அவன் சொன்ன விடை இது.

“கருத்த மேகங்கள் வானைச் சூழ்ந்துவிட்டன; இனி வையகத்தில் இருள் சூழ இருக்கிறது; இடியும் மின்னலும் சேர்ந்து ஒலிக்கவும் ஒளிதரவும் போகின்றன. தீமை அழியும், நன்மை தழைக்கும்; போரைத் தடுக்க முடியாது; அறுவடைக்குக் காத்திருக்க வேண்டியது தான்” என்று கூறினான்.

“போருக்கு என்றே பிறந்த உங்களைப் பாருக்குப் பயன்படப் பெற்றேன். உயிர் உமக்குத் துச்சமாக இருக்கிறது. அதை உகுப்பது எப்போது என்று காத்துக் கிடக் கிடக்கின்றீர். வாழப் பிறந்தவர்கள் என்று உங்களை தெய்வங்கள் படைக்கவில்லை. உலகில் அறம் தழைக்க உங்களை இழக்கத்தான் போகிறீர்கள். ஒன்று கேட்க விரும்புகிறது இந்தத் தாய் மனம்; அதனை வரம் என்று கொண்டாலும் சரி அல்லது உளறல் என்று தவிர்த்தாலும் சரி";

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/197&oldid=1045154" இலிருந்து மீள்விக்கப்பட்டது