பக்கம்:மாபாரதம்.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

295


“அசுவசேனன் என்னும் அரவு அருச்சுனனின் ஆவியை வாங்க உன்னிடம் தாவி வந்துள்ளது. ஒரு முறை ஏவிய அது தவறினால் மறுபடியும் ஏவுதல் வேண்டாம்; தவிர்க்கவும். அடுத்த தம்பியர் நால்வரையும் உயிர் தொடுவது இல்லை என்று எனக்கு உறுதி தருக” என்றாள்.

“இதில் தருவதற்கு எதுவும் இல்லை; வீரன் சாவை ஒரு முறைதான் சந்திப்பான். அதே போல் ஓர் அம்பை ஒரு முறைதான் தொடுப்பான். எளியவரைக் கொல்வதில் எனக்குப் பெருமை இல்லை. அருச்சுனன் என்னைக்கொன் றான் என்றால் அவனுக்குப் பெருமை; அவனால் எனக்கும் பெருமை. அதுபோல அவனை நான் கொன்றால் இருவருக்கும் பெருமை சேரும்; கதிரவன் மைந்தன் ஒளி குன்றும் செயல்களைச் செய்யான்” என்று உறுதிதந்தான்.

குந்தி புறப்பட இருந்தாள்; அவளை நிறுத்தி வந்து அழுத்தம் திருத்தமாக இரண்டு வரங்களைக் கன்னன் கேட்டான். பாண்டவர்க்கு எதையும் உரைக்கக் கூடாது. தான் இறந்தபின் தன்னை மடியில் கிடத்தி அழுது தான் யார் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்றான்.

பாரதப் போர் அதற்குள் அணிவகுத்துப் படைகள் நிற்கத் தொடங்கின. மாதங்கள் வந்து குவிந்தன.

உறுதி கொண்ட நெஞ்சினர் புதிய பாரதம் அமைக்கக் களம் நோக்கிச் சென்றனர். வீரசுதந்திரம் வேண்டி நின்றவர் போல் தீரமாகப் போர் செய்யப் புறப்பட்டனர். குலகுரு மரபினர் இருவரும் சந்தித்த களம் குருக்ஷேத்திரம் எனப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/198&oldid=1045155" இலிருந்து மீள்விக்கப்பட்டது