பக்கம்:மாபாரதம்.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

மாபாரதம்


7. வீடுமனின் வீழ்ச்சி

முகுந்தன் வாசகம் கேட்டு முரசு உயர்த்தவனாகிய தருமன் அரசர்களுக்கு எல்லாம் ஒலை போக்கிப் படை களுடன் வருக என்று செய்தி அனுப்பினான். எட்டுத் திக்கில் உள்ள மன்னர்கள் பட்டுத் துகில் எல்லாம் பதாகைகளாக உயர்த்திப் பாண்டவர் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்.

பாஞ்சால மன்னனான துருபதனும், அவன் மைந்தர்கள் திட்டத் துய்மனும், சிகண்டி என்பாளும், துருபதனின் பேரனான திட்டகேதுவும், உத்தமோசா என்னும் துருபதனின் உறவினனும், மற்றோர் உறவினன் உதாமன் என்பவனும் யானை, தேர், பரி, ஆள் என்ற நால்வகைப்படை யுடன் வந்து சேர்ந்தனர். இவர்கள் எல்லாம் பாஞ்சாலியின் உறவினர்கள்.

மறைந்திருந்த நாடாகிய மச்ச நாட்டில் இருந்த விராட பூபதியும், சதானிக நிருபனும், சுவேதனன் ஆதிவ ராககேது, உத்தரகுமரன் ஆகியவரும் வந்து சேர்ந்தனர். தென்னாட்டில் இருந்து சேரர், சோழர், பாண்டியர் மூவரும், கேகய நாட்டு அரசர்களும், குந்திபோச நாட்டு மன்னர்களும் வந்து சேர்ந்தனர்.

அவ்வாறே எதிரிகளைச் சார்ந்தவர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர்.

வீடுமன், கிருபன், கன்னன், துரோணன் சயத்ரதன் பகதத்தன், சல்லியன் முதலிய மாவீரர்களும், பதினோரு அக்குரோணி எண்ணிக்கை அளவு படை வீரர்களும் வந்து சேர்ந்தனர். துவாரகையில் இருந்து யாதவ சேனையும் வந்தது; பரசுராமனிடம் வில்வித்தை பயின்ற வீடுமனைப் படைத்தலைவனாக ஆக்கினான் துரியன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/199&oldid=1045156" இலிருந்து மீள்விக்கப்பட்டது