பக்கம்:மாபாரதம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

மாபாரதம்

வீரனும் அவள் மீது அம்பு ஏவமாட்டான். அவளோடு நின்று ஒதுங்கி அருச்சுனன் அம்பு இட்டால் அதனை மலர் எனவே கொண்டு மார்பைக் காட்டுவேன். எதிர்த்து அவனைத்தாக்க மாட்டேன். அம்புகள் என்னை அலங்கரிக்கும். அதுவே எனக்கு மலர்ப் படுக்கையுமாகும். அதன் முடிவே எனக்கு வீரமணம்” என்று தன் குறைபாட்டை எடுத்து உரைத்தான். உயிர்மேல் ஆசை இல்லாமல் உள்ளதைச் சொல்லும் உயர்வு அவனிடம் அமைந்திருந்தது;பத்துநாள் வீடுமனோடு போர் செய்ய வேண்டிய பொறுப்பினை உணர்ந்தனர்.

துரோணனும் தன் குறையை உரைக்கத் தொடங்னான். “மகன் இல்லாமல் யான் வாழ முடியாது” என்ற பாசத்தின் பாங்கினை எடுத்துக் கூறினான். படுகளத்தில் அசுவத்தாமனை அடுபோரில் கொன்று அந்தச் செய்தியை மன்னர் பலர் அறியப் பறை சாற்றினால் அடுத்து அம்பும் வில்லும் கவசமும் வீரமும் என்னை விட்டு அகலும்; நிராயுதபாணியாக நின்று நிமலனை நினைத்து வாழும் மனநிலை பெறுவேன்; அந்த நிலையில் மீனைக் கொத்தக் காத்திருக்கும் கொக்குப் போல வாடிக் காத்திருக்கும் திட்டத்துய்மன் என் தலையை அழித்துப் பந்தாடுவான். அதுவரை என் போர் நீடிக்கும்” என்றான். அவன் போர் ஐந்து நாள் தொடர்ந்து நடக்கும் என்று தெரிந்தது.

கண்ணன் பாண்டவர்க்குத் துணை இருக்கும் வரை அவர்களை வெல்வது யாராலும் இயலாத ஒன்று என்றும் உரைத்தனர். பாண்டவர்கள் முதுகுரவர் இருவரையும் வணங்கி ஆசி பெற்று நீங்கினர்.

பாண்டவர்களை எதிர்த்துப் போரிட மூன்று மா வீரர்கள் இருந்தனர். வீடுமன், துரோணன், கன்னன் ஆகிய இம்மூவரிடம் தொடுத்த போர்கள் வரலாறு படைத்தவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/207&oldid=1046420" இலிருந்து மீள்விக்கப்பட்டது