பக்கம்:மாபாரதம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

மாபாரதம்

இறுதிவரை ஏன் போராடவேண்டும்? அதுவும் அவன் பரந்த மனப்பான்மையையே காட்டுகிறது. பாண்டவருக்குக் கண்ணன் உதவியாக இருக்கிறான்; அவர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்ய மாபெரும் துணை அவர்களுக்கு வாய்த்திருக்கிறது.

துரியனுக்குத் தக்க துணை இல்லை; தவறு செய்து அழிவுப்பாதையில் சென்று கொண்டே இருக்கிறான். குருடனுக்கு வழி காட்டுவது மானுட தருமம்; அதனால் தான் அறியாமையும் தீமையும் நிறைந்த துரியன் பக்கம் நின்று வீடுமன் செயலாற்றுகிறான்.

அரசியல் கட்சி என்று வந்து விட்டால் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவை. மன்னன் என்று ஒருவன் அமைந்து விட்ட பிறகு அவனுக்கு அறிவு சொல்லலாம்; ஆனால் எதிர்க்கக்கூடாது என்ற கொள்கை உடையவன். அறத்துக்கு மதிப்புத் தந்திருந்தால் அவன் ஒரு வீடணன் ஆகி விட்டு இருப்பான். கடமைக்கு மதிப்புத் தந்ததால் அவன் ஒரு கும்பகருணனாகச் செயல்பட்டான்.

வீடுமன் துரியனே வெற்றி பெற வேண்டும் என்ற உறுதி கொள்ளவில்லை; தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொறுப்பையும் கடமையையும் செம்மையாக ஆற்றுவதே தன் செயற்பாடு என்று கொண்டான். அபிமன்யு, அருச்சுனன், வீமன் இவர்கள் தன் மீது அம்பு விடும்போதும் அவர்களை வெறுக்கவில்லை. அவர்கள் வில்லாற்றலையும் போர்த்திறமையையும் கண்டு வியந்து வந்தான்.

சாவுக்கு அவன் அஞ்சியது இல்லை. காலனும் அவனைக் கேட்டுக்கொண்டு தான் அவன் கணக்கை முடிக்க முடியும். இந்தக்கிழவனை விலகச் சொன்னால் விலகுவதாக இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/217&oldid=1046514" இலிருந்து மீள்விக்கப்பட்டது