பக்கம்:மாபாரதம்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

மாபாரதம்


அத்தமனம் வந்தது; வழக்கம் போல் போர் நின்றது. பாசறையில் துரியன் உறங்காது இலக்கணனை அபிமன் சிறைப்பிடித்த நிகழ்ச்சியைக் குறித்து உரையாடினான்.

துரோணரிடம் தன் மகன் இலக்கணனைச் சிறைப் பிடித்தவர்கட்குச் சரியான படிப்பினை புகட்டவேண்டும் எனப் புகன்றான். போர் நிகழ்ச்சிகளில் ஒரு திருப்பு நிலை அமைக்க வேண்டும் என்றான்.

தருமனைச் சிறைப்பிடித்துத் தன்னிடம் சேர்த்து விட்டால் தம்பியர்கள் சரண் அடைவார்கள் என்று கூறினான்."வலிமை மிக்க வாயுவின் மகன் பின்னே நிற்க இந்திரன் மகன் விசயன் வில்லோடு நிற்க இந்த இப்பிறவி யில் தருமனைப் பிடிக்க முடியும் என்பது என்னால் இயலாது” என்று துரோணன் தன் இயலாமையைத் தெரிவித்தான்.

“கண்ணன் தேர் செலுத்த விசயன் தருமனைக் காக்க அந்தநிலையில் உறுதியாக அவனைக் கைப்படுத்த இயலாது; கண்ணனையும் விசயனையும் சற்றுத் தருமனை விட்டு அகலச் செய்தால் அந்த இடைவேளையில் தருமனைக் கைப்படுத்த முயலலாம்” என்றான்.

அவர்கள் இருவரையும் யார் தனியே இழுத்துச் செல்வது என்பது பற்றி விவாதம் நடந்தது. திரிகர்த்த அரசன் முதலாக சம்சப்தகரைச் சார்ந்த சில மன்னர்கள் தாம் விசயனைப் போருக்கு அழைத்து அறை கூவி அவனைத் தம்மோடு போர் லெய்யுமாறு செய்து பிரித்து வைப்பதாகச் சூள் உரைத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/223&oldid=1046532" இலிருந்து மீள்விக்கப்பட்டது