பக்கம்:மாபாரதம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

மாபாரதம்


தேவ விர தன் இத்தகைய பயங்கரமான விரதம் மேற் கொண்டது சந்தனுவை வியப்பில் ஆழ்த்தியது; அதிர்ச்சியையும் தந்தது. பட்டத்துக்கு உரிய பாராளும் வேந்தன் மகன் தந்தைக்காகத் தன் வாழ்க்கை இன்பத்தையே துறந்த தூய்மையும் தியாகமும் அவனை மேலோன் ஆக்கின.

யயாதிமகன் இளமையை ஈந்து தந்தைக்கு வாழ்வு தந்தான். “இளமையோடிருந்து இன்பத்தைத்துறந்தாயே யயாதி மகன் உனக்கு நிகர் ஆக மாட்டான்” என்றான் அவன் தந்தை சந்தனு.

“காலனும் உன்னைக் கண்டு சாலவும் அஞ்சுவான்; நீடித்த ஆயுள் பெறுவாய், அவனும் உன் அனுமதி பெற்றே உனக்கு ஆயுள் முடிப்பான்” என்று அவனை வாழ்த்திப் பாராட்டினான்.

சந்தனுவின் சந்ததியர்

பரிமள கந்தியைச் சந்தனு பாணிக்கிரகணம் செய்து கொண்டான்; கங்கையிலும் இவள் இளையவள் அதனால் இவள் இன்பம் இருமடங்கு ஆகியது. மீனவர் குலத்தினள் ஆயினும் அரசிக்கு வேண்டிய அறிவும் ஆசாரமும் அவளிடம் மிகுந்து இருந்தன. சத்தியவதி என்னும் புதுப்பெயர் அவளுக்குப் பெருமை சேர்த்தது.

சந்ததிவேண்டியே சந்தனு அவளை மணந்தான்; சித்திராங்கதன், விசித்திர வீரியன் என்ற இரண்டு மைந்தர்களை அவள் பெற்றெடுத்தாள். வீடுமனின் பார்வையில் அவர்கள் கலைகளைப் பயின்ற காளையர் ஆயினர்.

சந்தனு ஆயுள் முடிந்தது; இயற்கை அவனுக்கு விடுதலை அளித்தது. சாபம் தீர்ந்து பிறவி முடிந்து விண்ணவன் ஆயினான்; அவன் சந்ததி ஆட்சிக்கு உரிமை பெற்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/23&oldid=1048258" இலிருந்து மீள்விக்கப்பட்டது