பக்கம்:மாபாரதம்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

231

அடித்துக் கொல்லப்பட்டு மரணம் அடைந்தது அவனுக்கு மனநிறைவைத் தந்தது.

காட்டுத் தீப்போல அபிமன்யு பட்ட செய்திபரவியது. விசயனின் மகன் அபிமன் சாக முடியும் என்பதை யாருமே நம்பவில்லை. இதன் பின் விளைவுகள் என்ன ஆகுமோ என்று அனைவரும் அஞ்சினர்.

தருமனும் வீமனும் செய்தி கேட்டு உய்தி இல்லை என்று வருந்திப் புலம்பினர்.

கண்ணன் விசயனுக்கு எப்படிச் செய்தி செப்புவது என்று திகைத்தான். அதனை அதிர்ச்சி தோன்றாதபடி அறிவிப்பது எப்படி என்று யோசித்தான்.

இந்திரனை வரவழைத்து ஒரு நாடகம் நடத்தும்படி கேட்டுக் கொண்டான். இந்திரன் அந்தண வடிவு எடுத்தான். கண்ணனும் விசயனும் வரும் வழியில் சிதை ஒன்று அடுக்கிக் கொளுத்தி வைத்து ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தான். அதை மூன்று முறை வலம் வந்து அதில் தீக்குளிக்கக் காத்திருந்தான். அதற்குத் தக்க விளம்பரம் தந்து அவனைப் பலர் சூழும்படி செய்துகொண்டான்.

விசயன் அவன் விசனத்தைப் பற்றி விசாரித்தான். “எனக்கு ஒரே மகன்; அவன் இல்லாமல் நான் உயிர் வாழ்ந்து என்ன பயன்? யாருக்காக வாழ வேண்டும்? எதற்காக வாழ வேண்டும்? அவனை எரிக்கும் அதே நெருப்பு என்னையும் எரிக்கட்டும்” என்று விம்மி விம்மி அழுது அலுத்துக்கூறினான்.

விசயன் தடுத்தான்; வினாக்கள் பல தொடுத்தான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/234&oldid=1047235" இலிருந்து மீள்விக்கப்பட்டது