பக்கம்:மாபாரதம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

மாபாரதம்


“அவன் விதி; அது அவன் கதி; நாம் உயிர் வாழ்வது தான் மதி. அவன் கடமையை முடித்து அவன் இறந்து விட்டான். உனக்கு என்று வகுத்த கடமைகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றை யார் முடிப்பார்கள்? நீ இருந்து உன் மனைவிக்கு ஆறுதல் சொல்ல வேண்டாமா? குடும்பத் தலைவன் நீ; நீயே இந்த இடும்பைக்கு உள்ளானால் மற்றவர்கள் நிலைமை என்ன ஆகும்?” என்று கேட்டான்.

“நீர் எளிதில் சொல்லி விடுகிறீர். உங்களுக்கு இது போல் துன்பம் வந்தால் உங்களால் தாங்க முடியுமா? சொல்லுதல் யார்க்கும் எளிது; செயல் செய்வதுதான் கடினம். நீங்கள் உங்கள் மகனை இழக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. விதி அப்படிக் கூட்டினால் உங்கள் மதி எப்படிச் செயல்படும்? உம்மால் அதைத் தாங்கிக் கொண்டு உயிர் வாழ முடியுமா?” என்று பதிலுக்குக் கேட்டான்.

“நிச்சயம் முடியும்” என்றான்.

“சத்தியம் செய்து தர முடியுமா?” என்று கேட்டான்.

“க்ஷத்திரியன் சொல் தவறான்” என்று கூறி அவனை நெருப்பில் விழாமல் தடுத்து அனுப்பினான்.

“நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பேசும் பெருமைதானே இவ்வுலக வாழ்க்கையின் இயல்பு. இறப்பு இயற்கையின் நியதி. இதை அறியாமல் இந்த மானுடர் இரங்கற்பா பாடுகிறார்களே!” என்று விசயன் தத்துவம் பேசினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/235&oldid=1047236" இலிருந்து மீள்விக்கப்பட்டது