பக்கம்:மாபாரதம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

21


சித்திராங்கதன் கந்தருவனைப்போல அழகு மிக்கவன்; அதனால் யவ்வன அழகியர் அவனைக் காதலித்தனர். கந்தருவன் ஒருவனுக்கும் இப்பெயர் இருந்தது; அவனுக்குப் போட்டியாக இவன் காரிகையரைக் கவர்ந்தான். இவனை ஒழித்தால்தான் தனக்கு நன்மை என்று அக்கந்தருவன் இவனைத் தனி வழியில் இரவு நேரத்தில் தீர்த்துவிட்டான். வீடுமனுக்கு இவனை யார் கொன்றது என்பது தெரியாது: “வாலிபக் கோளாறு; எங்கேயோ மோதிக் கொண்டான்” என்பது மட்டும் தெரிந்தது.

அவன் தம்பி விசித்திர வீரியன்; குடிக்கு ஒரே மகன்; அவனை மணி முடி சூட்டிப் பார் ஆளும் பார்த்திபன் ஆக்கினான். சத்தியவதி அவனுக்கு மணம் முடித்து மகிழ்வு காண விரும்பினாள். வீடுமன் அப்பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

காசி நகரத்து அரசனின் கன்னியர் மூவர்க்கு மண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. சுயம்வரம் என்று பேசி அரசர்க்குச் செய்தி செப்பினர். மலரை மொய்க்கும் வண்டு என மன்னன் சிறுவர்கள் வந்து கூடினர். அம் மூவரின் பெயர்களும் அகரத்தில் தொடங்கின. அம்பை, அம்பிகை, அம்பாலிகை என்பவை அவர்களின் பெயர்கள்.

வழக்கப்படி மாலை ஏந்திய மங்கையர் மூவரும் மண்டபத்தில் நிறுத்தப்பட்டனர். பாங்கியரும் செவிலியரும் பக்கத்தில் இருந்து பார்த்திபரை அறிமுகம் செய்தனர்.

வீடுமனைக்கண்டதும் அவர்கள் சற்று ஒதுங்கினர். முற்றிய முருங்கை கறிக்கு உதவாது என்று அம்முதிர்க் காளையை வெறுத்தனர். அவன் அதனை மான இழப்பாகக் கருதினான். ஒருத்திக்கு மூவரைத் தம்பிக்குக் கட்டி வைப்பது என்ற முடிவோடு அம் மூவரையும் தன் தேரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/24&oldid=1048262" இலிருந்து மீள்விக்கப்பட்டது