பக்கம்:மாபாரதம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

238

மாபாரதம்

களைத்துவிட்டான். இதை அறிந்து வருணனின் மகனாகிய சுதாயு என்பவன் களத்தில் இறங்கி விசயனைச் சந்தித்தான். அவன் சாகாவரம் பெற்றிருந்தான். விசயன் விடும் அம்புகள் அவனை ஊறு செய்யவில்லை. சுதாயு வீசிய கதாயுதத்தைக் கண்ணன் நன் மார்பில் ஏற்றுக் கொண்டான். விளைவு சுதாயுவே மரணமடைந்தான். சாகாவரம் பெற்றிருந்தவன் நிராயுத பாணியாக இருக்கிறவர் மீது ஆயுதம் தொடுத்தால் அது ஏவியவர்களையே தாக்கும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது. அதனால் அவன் மடிந்து விழ வேண்டியது ஆயிற்று.

அவன் மகன் சதாயுவும் அருச்சுனனை எதிர்த்துக் களைத்துவிட்டான். அந்நிலையில் துரியோதனன், விசயன் தடுத்து நிறுத்தப்படாவிட்டால் தன் தங்கையின் கணவ னான சயத்திரதன் உயிர் துறப்பது உறுதி என்றும், தான் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது என்றும் கூறித் தன்னைப் போர்க்களம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றான். துரோணன் தன் கைவசம் இருந்த கவசம் ஒன்றைத் தந்து அதை அணிந்து கொண்டு செல்லும்படி கூறினான்.

அதை அணிந்துகொண்டால் விசயனின் அம்பு துளைக்காது என்று அறிவித்தான். அவ்வாறே அக்கவ சத்தை அணிந்துகொண்டு துரியன் அருச்சுனனைத் தாக்கச் சென்றான், அருச்சுனன் விட்ட அம்புகள் அவனைத் தொடவே இல்லை. எதிரிகள் எளிதாக அருச் சுனனைச் சூழ்ந்து கொண்டனர். விசயன் களைத்துப் போய்ப் போர் செய்தலைத் தவிர்த்து நின்றான்.

கண்ணன் உடனே தன் சங்கு எடுத்து வாயில்வைத்துப் பேரொலி செய்யச் சிற்றெலிகள் போல் நடுநடுங்கிப் படைகள் சிதறி ஓடின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/241&oldid=1047289" இலிருந்து மீள்விக்கப்பட்டது