பக்கம்:மாபாரதம்.pdf/245

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

மாபாரதம்

கையைத் துணித்தான்; வாளோடு அவன் வலக்கை கீழே விழுந்தது.

“உனக்கு உதவி செய்ய வந்த இளையவனை நீ உதாசீனம் செய்யகூடாது. அது தர்மம் ஆகாது” என்று தெளிவுபடுத்தினான். அதற்குள் களைப்பு நீங்கி எழுந்த சாத்தகி எதிரியின் தலையை அறுத்துத் தன் பகையை முடித்துக் கொண்டான். உதவிக்கு வந்தவர்கள் அவரவர் களுக்குரிய சொந்தப் பகையை முடித்துக்கொள்ள இப் போர்க்களம் பயன்பட்டது.

துரோணனின் முடிவு (பதினைந்தாம் நாட் போர்)

இறபுறத்திலும் போர்க்களம் நோக்கி விரைந்தனர். ஆற்றல் மிக்க துரோணனை அழிக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது. தேவ ரிஷிகளும் நிலத்திற்கு வந்து துரோணனுக்கு அறிவுரை கூறினர். அந்தணர் குலத்தில் பிறந்த அவன் தவ வாழ்க்கையில் ஈடுபடாமல் க்ஷத்திரிய தர்மத்தில் ஈடுபட்டுத் தேவை இல்லாமல் களத்தில் இறங்கியதைக் கண்டித்தனர். அவர்கள் உபதேசம் கேட்ட ஆசான் ஆகிய துரோணன் போரில் வெறுப்புற்றுத் தேரும், யானையும் ஊராமல் கால் நடை நடந்து களம் நோக்கிச் சென்றான்.

அவனைத் தொலைத்தால் அல்லது பாண்டவர்க்கு யாதொரு நலமும் வராது என்று அறிந்து துணிந்து கண்ணன் அதற்குத் தக்க வழியைச் சிந்தித்தான். வீமன் மாளவத்து அரசனாகிய இந்திர வர்மன் என்பவனின் யானையாகிய அசுவத்தாமனைக் கொன்று முடித்தான். அந்தச் செய்தியை வைத்துக் கொண்டு ‘அசுவத்தாமன் இறந்தான்’ என்று பலரும் கேட்க உரக்கச் சொல்லுமாறு தருமனை வேண்டினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/245&oldid=1048263" இலிருந்து மீள்விக்கப்பட்டது