பக்கம்:மாபாரதம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

மாபாரதம்

வேண்டுமென்றே பயண வண்டியைத் தவறவிட்டாள். அம்பாலிகை மனம் மாறினாள். கட்டிலில் பணிப்பெண்ணைக் கிடத்திவிட்டுத் தாயாவதிலிருந்து தான் தப்பித்துக் கொண்டாள். பணிப்பெண் தாசிப்பெண்; அவள் கூசி ஒதுங்கவில்லை; இதில் எந்தத் தயக்கமும் காட்டவில்லை; தொழில் அறிந்தவள். வியாசனுக்கு விருந்து படைத்தாள்; காமநூலின் எழுத்துக்களை எண்ணிப் படித்துக் களிப்பு என்பதன் கரையை வியாசன் கண்டான். மனமுவந்து அறிஞன் ஒருவனை அன்று அவள் அனுமதித்தாள்.

அறிவுடைய மகன் பிறப்பான் என்று வியாசன் சொல்லிப் போனான்.

அறிவும் ஒழுக்கமும் மிக்க விதுரன் அவளுக்கு நன் மகனாகப் பிறந்தான்; எனினும் மற்றவர்களைப் போல அந்தஸ்து அவனுக்குக் கிடைக்கவில்லை; தாசி மகன் என்ற ஏசுதலுக்கு அடிக்கடி இரையாக வேண்டி இருந்தது.

மூவர் குரு குலத்து வாரிசுகள் பிறந்ததால் வீடுமனும் பெரு மகிழ்வு பெற்றான். மூவரையும் சரி சமமான நிலையில் மதித்து வளர்த்து அதில் மகிழ்வு கண்டான்.

அம்பிகையின் மகன் திருதராட்டிரன் மூத்தவன்; ஆகையால் மணி அவனை முடி சூட்டிப் பாராளும் மன்னன் ஆக்கினான். அடுத்து அம்பாலிகை மகன் பாண்டுவைச் சேனாதிபதியாக்கினான்; விதுரனை அமைச்சனாக இருக்கச் செய்தான்.

திருதராட்டிரன் திருமணம்

காந்தார நாட்டுக் கன்னியை மணம் பேச வீடுமன் தக்கவரை அனுப்பி வைத்தான். மதிகுலத்தில் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/31&oldid=1034223" இலிருந்து மீள்விக்கப்பட்டது