பக்கம்:மாபாரதம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

மாபாரதம்

பட்டான். கவுதமனின் மகன் சரத்துவன் என்பவன் விற்கலையிலும் வேதநூல் கல்வியிலும் விவேகம் உடையவனாக இருந்தான். இவற்றோடு தவ வாழ்க்கை மேற் கொண்டு அவன் உயர் பதவிகள் அடைய விரும்பினான். அவன் தவத்தைக் கெடுக்க இந்திரன் அழகி ஒருத்தியை தேவர் உலகத்தினின்று அனுப்பி வைத்தான்.

சரத்துவன் என்னும் அம்முனிவன் அவள் அழகில் மயங்கித தவத்தைக் கெடுத்துக் கொண்டான். அவளோடு இன்ப வாழ்வு நடத்தி ஒரு மகனையும் மகளையும் பெற்றான். தான் செய்த தவறுக்காக வருந்தினான். அச்சரித்திரத்தை மறைத்து வைக்க அக்குழந்தைகள் இருவரையும் நாணற் காட்டில் தனது வில் அம்புகளோடு தவிக்க விட்டுச் சென்றான்.

ஆதரவு அற்ற அக்குழந்தைகளை அவ்வழியிற் சென்ற சந்தனு மகாராசன் தன் மனைக்கு எடுத்துச் சென்று வளர்த்தான். கிருபையால் எடுத்து வளர்க்கப்பட்டவன் ஆதலின் அவனுக்குக் கிருபன் என்று பெயர் வழங்கியது. அவன் தங்கையின் பெயர் கிருபி ஆகியது.

கிருபனின் தந்தையாகிய சரத்துவன் என்பவன் பிற் காலத்தில் அத்தினாபுரி வந்து தன் மகனுக்குத் தக்க வயதில் வில் வித்தை கற்பித்து விட்டுச் சென்றான். அதனால் கிருபன் வில் பயிற்சியில் விற்பன்னனாக இருந்தான்.

சந்தனு மைந்தனாகிய வீடுமன் அவனை ஆசிரியனாக அமர்த்திப் படைக்கலப் பயிற்சி பெறுமாறு குருகுல மைந் தர்கள் ஆகிய பாண்டவரையும் துரியோதனாதியரையும் அனுப்பி வைத்தான். வில்லும் வேலும் வாளும் அவர்கள் கற்ற வித்தைகள் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/43&oldid=1034244" இலிருந்து மீள்விக்கப்பட்டது