பக்கம்:மாபாரதம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

மாபாரதம்

துரோணன் தனத்தில் ஆசை இல்லாமல் வனத்தில் தவம் செய்து வந்தான்; கிடைத்ததைக் கொண்டு மன நிறைவோடு வாழ்ந்து வந்தான். கிருபனின் தங்கை கிருபி ஆகிய அவளை மணம் முடித்து ஒரு மகவுக்குத் தந்தை யானான்; வாழ்க்கை அன்பில் மலர்ந்தது; அது கனிய வளம் இல்லாமல் போய் விட்டது.

ஐந்தாவது வயது வரை வறுமையில் உழன்ற அச் சிறுவன் எந்தவிதசுகமும் கண்டதில்லை. மாவின் கஞ்சியே அவனுக்குக் கிடைத்தது; ஆவின் பாலைக் குடித்து அறிய மாட்டான். அதனால் அந்தக் கோவின்பால் அடைந்து பழைய நட்பைப்பற்றிப் பேசினான். அச்சிறுவன்தான் அசுவத்தாமன் என வளர்ந்தான்.

“யார் நீ?” என்றான் துருபதன்; அறியாதவன் போல.

“யான் உன் பள்ளி நண்பன்; பாதி அரசு தருக” என்று உரிமை கொண்டு கேட்டான் துரோணன்.

“மன்னன் யான்; முனிவன் நீ எனக்கும் உனக்கும் எப்படி நட்பு உண்டாக முடியும்?” என்று அரச அவையில் அவனை ஏசி அனுப்பினான்.

“நீ வார்த்தை தவறுகிறாய்! நீ தவறி முடிக்காததை நான் முடித்துக் காட்டுகிறேன்; தேரில் ஏறி ஊர்வலம் வரும் உன்னை ஊரில் சிரிக்கக் கட்டிக் கொணர்வேன். நீ அறிவித்த பாதிப்பாகம் என் வலிமையால் பெறுவேன்; இது உறுதி” என்று சொல்லி வந்தான்.

பழைய வரலாற்றை வீடுமனிடம் எடுத்துச் சொல்லி இந்தச் சூளினை முடித்துக் கொடுப்பதாக இருந்தால் அங்கு ஆசிரியர் பணி ஏற்பதாகக் கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/45&oldid=1048290" இலிருந்து மீள்விக்கப்பட்டது