பக்கம்:மாபாரதம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

மாபாரதம்

களைத் தீயே தீய்த்து விட்டது. வேடுவர்கள் படு பிணம் ஆயினர். பாண்டவர் ஐவரும் தாயும் தப்பி வெளியேறினர்.

பாண்டவர்கள் ஐவரும் அநியாயமாகத் தீயிற்கு இரையாகிவிட்டனரே என்று அத்தினாபுரி அரசஇல்லத் தினரும் முனிவர்களும் நாட்டு மக்களும் பேசிக் கவலை தெரிவித்தனர். துரியனின் நண்பர்கள் முதலைக்கண்ணிர் வடித்துப் பாண்டவர்க்கு முத்தாய்ப்பு வைக்கப்பட்டதற்கு உள்ளுர மகிழ்வு கொண்டனர். வீமனின் செயல் வெற்றி பெற்றது; அவன் திறன் வெளிப்பட்டது. இடிம்பன் வதம்

அரக்கு மாளிகை விட்டு ஐவரும், அன்னை குந்தியும் தப்பியபின் அவர்கள் கண்டது ஒரு மலைச்சாரல்; அது ஒரு பெருங்காடு; அங்கேயே இடிம்பன் என்பவன் வாழ்ந்து வந்ததால் அதற்கு இடிம்பவனம் என்று பெயர் வழங்கியது. அவ்வனத்தில் வாழும் இடிம்பன் என்ற அரக்கனின் தங்கை இடிம்பி என்பவள் வீமனை வந்து சந்தித்தாள்.

செந்தீ போன்ற செம்பட்டை மயிர் உடைய அரக்கி யாகிய இடிம்பி அரச மகள் போல் தன்னை அழகுபடுத்திக் கொண்டு அடல் ஏறு போன்ற வீமன் முன் நின்றாள்.

“நள்ளிரவில் கள்வரைப்போல வந்தது ஏன்? மற்றும் துணையாக உள்ள நால்வர் யார்? அன்னைபோல் அருகில் உள்ள மூதாட்டி யார்?” என்று வினவினாள்.

“என்னை வினவ நீ யார்? அதை முன்னர்ச் சொல்க” என்றான்.

“இந்திரசித்து நிகர் இளங்காளையாகிய இடிம்பனின் தங்கை யான்! அவன் அனுப்ப யான் இங்கு வந்திருக்கிறேன்” என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/59&oldid=1048301" இலிருந்து மீள்விக்கப்பட்டது