பக்கம்:மாபாரதம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

மாபாரதம்

வில்லை. வானில் இருந்து எழுந்த குரல் அவனுக்கு அருச்சுனனைக் காட்டியது: நம்பிக்கை வளர்ந்தது; மற்றும் இடிம்பன், பகன் முதலியவர்கள் இறந்த செய்தி பரவியது; அவர்களை அழிக்கும் ஆற்றல் வீமனுக்கே உண்டு என்பது நாடறிந்த செய்தி, அதனால் அவன் துணிந்து சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்து ஒலைகள் போக்கி அவர்களுக்கு அழைப்பு விடுத்தான்.

வில்லை வளைத்து வீரம் காட்டி மணக்கும் ஆசையில் வந்தவர் சிலர்; அந்த மண விழாவிற்கு வந்து ஆசீர்வதிக்க அழைக்கப்பட்டவர் சிலர். பரிசில் கிடைக்கும் என்று குழுமிய கலைஞர்கள் பலர். மூட்டை முடிச்சுகளோடு கல்யாணக் சாப்பாடு சாப்பிட முன் கூட்டி வந்தவர்கள் பலர்; மணவிழாவில் வேள்வி முன் சடங்குகள் இயற்ற வந்த அந்தணர்கள் சிலர். இப்படி அந்த ஊர் புதியவர் களைக் கொண்டு விழாக்கோலம் பூண்டது.

செய்தி அறிதல்

பாஞ்சால நாட்டில் பசுந்தோகை மயில் போன்ற திரெளபதியின் சுயம்வரத் செய்தி வேத்திரகீயமும் எட்டியது. புரோகிதம் செய்து பிழைப்பு நடத்தும் பிராமணர்கள் இச்செய்தியைப் பரப்பினர். ஊரில் உள்ள சுறுசுறுப்பானவர்கள் சிலர் மணவிழா கண்டு மகிழவும், மன்னன் தரும் கொடைப் பொருளைப் பெற்று வரவும் கூட்டம் கூட்டமாகப் புறப்பட்டனர்.

குந்திக்கு வேத்திரகீயம் அலுத்துவிட்டது; இரந் துண்ணும் வாழ்க்கையை நடிப்புக்கு ஏற்றனர். அதனின்று விடுபட்டுப் புதுவாழ்வு தேட விரும்பினாள். அத்தினாபுரி அடைந்து உரிய பாகம் முற்றும் பெற்றுத் தம் மைந்தர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று விரும்பினாள். அதனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/71&oldid=1035192" இலிருந்து மீள்விக்கப்பட்டது