பக்கம்:மாபாரதம்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

71

வீட்டில் தங்கச் சொல்லிவிட்டுத் தமக்குத் துணையாக வந்திருந்த தௌமிய முனிவனோடு அரங்கு நோக்கி ஐவரும் நடந்தனர்.

ஆதியில் சோதிடர் ஐவருக்கும் உரியவள் தான் என்று கூறிய சொற்களை நினைத்தவளாய் உவகை மிக்கவளாக திரெளபதி இருந்தாள். சோதிடம் பொய்க்காது என்றும், உரிய வீரர் தோன்றுவர் என்றும் தாதியர் தேற்றத் தன் மனத் தளர்ச்சி நீங்கியவளாய் இருந்தாள்.

தோழியர் சித்திரங்கள் பலவற்றைக் காட்டச் சீர் மிகு அரசர்கள் அவர்களுள் பேர்மிகு விசயன் கொடிமணித் தேரில் வரும் கோலத்தை மட்டும் பன்முறை பார்த்துப் பழகி வந்தாள்.

வேள்வியில் பிறந்த தான் கேள்விப்பட்ட அருச்சுனனே தனக்குக் கேள்வன் ஆவான் என்ற நம்பிக்கை கொண்டிருந்தாள். மன்றில் தனக்கு மாலை சூட்டி அவன் மணந்திலனேல் மறுபடியும் துன்றும் எரியில் புகுந்து உயிரை மாய்த்துக் கொள்வது உறுதி என்று நினைத்தவளாய் அவன் வருகையை எதிர் நோக்கி இருந்தாள்.

அவைக்கு வந்த அணங்கு

பிறை போன்ற நெற்றியை உடைய திரௌபதியைத் தோழியர் பலரும் கூடிப் புனல் ஆட்டிப் புகையூட்டி மணக்கும் மாலையைச்சூட்டிக் காண்பவர் ஆண்மை தேய அழகு அமைய அலங்கரித்தனர். “குமரர் அனைவரும் வந்து விட்டனர். குமரிப் பெண்ணே வருக” என்று செவிலியர் அழைத்து அரங்கில் கொண்டு வந்து நிறுத்தினர். வீர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/74&oldid=1048313" இலிருந்து மீள்விக்கப்பட்டது