பக்கம்:மாபாரதம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மாபாரதம்

மன்னர்கள் தம விழிகளால் அழலில் பிறந்த பேரழகியை ஆர்வத்தோடு நோக்கி மன்மதன் அம்பால் வெந்து உருகினர். நெருப்பில் பட்ட மெழுகு போல் உள்ளம் மெலிந்தனர். அழகுக்கு விலைதர வில் வித்தை தமக்கு இன்மைக்கு வருந்தினர்.

மேகங்களிடையே மறைந்து கிடக்கும் சூரியனைப் போல அரசர் கூட்டத்திடையே பாண்டவர்கள் மாறு வேடத்தில் இருந்ததை அவள் பார்வை அறிந்ததோ அறியவில்லையோ தெரியவில்லை. நிச்சயம் அவள் பார்க்காமல் இருந்திருக்க முடியாது. மனத்தில் காதல் மிக அதனால் மெலிந்து ‘எனக்கு எனக்கு, என்று. தமக்குள் சொல்லிக் கொண்டு காத்திருந்த காவலரை நோக்கிச் சினக் களிறு போன்ற திட்டத்துய்மன் நினைக்கவும் அரிய செயலைச் சொல்லி அறிமுகம் செய்தான்.

“வில் இது; அம்பு இது; குயவனது சக்கரம் போன்ற வேகத்துடன் திரிகின்ற சக்கரம் அது; அதன் ஆரைகளின் இடையே அம்பு எய்ய மேலே நிலை இல்லாமல் அசைந்து கொண்டே இருக்கும் இலக்கினைக் குறிபார்த்து வீழ்த்த வேண்டும். அவனுக்கே என் தங்கை மாலை இடுவாள்” என்றான்.

வைத்திருக்கும் தேர்வு அரிது; வினாவைக் கண்டு விடைத் தாளை மடித்து வைத்தவர் பலர்; அதில் வெற்றி பெறுவது இயலாது என்று தெரிந்தும் அணங்கின் மேல் வைத்த ஆசையால் நாணம் விட்டு அம்பு காண ஒரு சிலர் முன்வந்தனர்; மையிட்டு எழுதினர்; கைவிட்டுத் தாள் நழுவியது; அவள் கூரிய விழிகளைப் போன்ற அம்பினையும், அவள் புருவத்தைப் போன்ற வளைந்த வில்லினையும் காணுந்தோறும் அவர்கள் நெஞ்சு திடுக்கிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/75&oldid=1048314" இலிருந்து மீள்விக்கப்பட்டது