பக்கம்:மாபாரதம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

73

நேசத்துக்கும் பாசத்துக்கும் உரிய உன் சகோதரன்; இவன் நம்பியவரைக் கைவிடாத நல்லோன் ஆவான்.”

“அதற்கு அடுத்து அமர்ந்திருப்பவன் கண்ணனின் தம்பி சாத்தகி; அடக்கம் உடையவன் ஆவான். அடுத்தவன் கண்ணனின் அத்தை மகன் சிசுபாலன். அவன் கண்ணனை இகழ்ந்து பேசுவதே தொழிலாகி விட்டது. சிக்கல் நிறைந்த வாழ்க்கை; சீராக வாழத்தெரியாதவன்.”

“கண்ணன் கம்சனைக் கொன்றான் என்பதற்காக சராசந்தன் அவனை வடமதுரையில் பதினெட்டு முறை தாக்கினான். அவன் கம்சனுக்குத் தன் மகளிர் இருவரை மணம் செய்து தந்தவன். அதனால் ஏற்பட்ட பகை இது. கண்ணன் தானே அவனைக் கொல்வது தேவை இல்லை என்பதால் வடமதுரையை விட்டுத் துவாரகைக்குப் போய் யாதவர்களுடன் அமைதியாக வாழ்க்கை நடத்துகிறான். இதனைக் கோழைத் தனம் என்று பல முறை சராசந்தன் சாடி வருகிறான்.”

பகதத்தன் என்பவன் நரகாசுரனின் மகனாவான். இந்திரனுக்கு இவன் உதவி செய்ததால் சுப்ரதீபம் என்ற யானையை இவனுக்கு இந்திரன் அளித்திருக்கிறான்; இந்த யானை மீது இவன் இவர்ந்து வந்தால் இவனை யாரும் வெல்ல முடியாது.”

“அடுத்தது சல்லியன்; மன்னர்களுள் சிங்கம் போன்றவன்; மாத்திரியின் சகோதரன் இவன்.”

“அடுத்தது நீலன்; அழகு மிக்கவன் இவன்.”

“அடுத்தது பாண்டியன்; தமிழ் அறிந்தவன்.”

“அடுத்தது சோழன்; காவிரி பாயும் திருநாடன், அவனுக்கு அடுத்து இருப்பவன் சேரன்; மலை நாட்டவன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/76&oldid=1048315" இலிருந்து மீள்விக்கப்பட்டது