பக்கம்:மாபாரதம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

மாபாரதம்


எனினும் அவ்விலக்கை வீழ்த்திவிட்டால் திருமகள் போன்ற அழகுடைய அவளை அடையலாம் என்ற ஆசையால் செய்வது அறியாது திகைத்தனர். அம்பைத் தொடுப்பதா வம்பை விலைக்கு வாங்காமல் தணிந்து ஒதுங்கி விடுவதா என்ற இருவேறு மன நிலையில் அலைமோதினர்.

மன்னரை அறிமுகம் செய்தல்

செவிலித் தாயர் அமுது அனைய அவ்வழகிக்கு வந்திருந்த மன்னரைக் காட்டி இன்னார் இவர்கள் என அறிமுகம் செய்யும்வகையில் அவர்கள் பெருமை தோன்றப் பேசினர்.

“அதோ வாய் மூடி மவுனியாக இருக்கிறானே அவன் யார் தெரியுமா அவன்தான் துரியோதனன்; வில் இலக்கைக் காட்டிச் சுடர் விளக்கை அடைதல் சரியானது அன்று என்று கூறி மறுத்து இருக்கலாம். அப்படிச் சொன்னால் தான் வில்திறன் அற்றவன் என்று நினைப்பார்களே என்பதற்காக அவன் சொல்திறன் அற்றுக் கிடந்தான்.

அவன் சிரிக்கிறானே என்று நினைக்கிறாயா அவ்வளவும் நடிப்பு; அதுமட்டுமல்ல; தனக்கு நிகராக இப்பேருலகில் யாரும் இருக்க முடியாது என்று வீண் அகம்பாவம் கொண்டவன்” என்று கூறித் துரியனை அறிமுகம் செய்தனர்.

“துரியனுக்கு அருகில் இருக்கிறார்களே அவர்கள் தாம் அவன் தம்பியர் ஆவர். பாம்பின் தலைகள் பல இருப்பது போல இவனுக்கு உடன் பிறந்தவர் பலர் ஆவர். அவ்வளவு பேரும் நச்சுப் பல்லை உடையவர்கள்; கொடுமைக்குத் துணைபோகும் அச்சில் வார்த்த அடிமைகள் அவர்கள்” என்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/77&oldid=1048316" இலிருந்து மீள்விக்கப்பட்டது