பக்கம்:மாபாரதம்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ராசீ

81


வியாசன் தந்த விளக்கம்

வேத வியாசன் வந்து விளக்கம் கூறினான். “ஐவரை மணக்க வேண்டியது அவசியம்தான்; அதற்குக் காரணம் உள்ளது” என்றான்.

“இவள் சென்ற பிறவியில் நளாயினியாக இருந்தவள்; மவுத்கல்லிய முனிவனின் பத்தினி இவள். அவன் இவள் கற்பினைச் சோதிக்க வெறுக்கத் தக்க தொழு நோயாளியாகத் தன்னை மாற்றிக் கொண்டான்”.

“கச்சணிந்த அழகியாகிய அவள் கொண்டவன் உண்ட மிச்சிலையே உண்டு வந்தாள். அவன் அழுகிய விரல் ஒன்று அதில் விழுந்து கிடந்தது; அதனையும் பொருட் படுத்தாமல் அருவெறுப்புக் காட்டாமல் அவ் உணவை அமுதம் என உண்டாள்; இச்சித்த காதல் இன்பம் பெறாமல் இளைத்த மெய்யினள் ஆயினாள்”.

“அவள் கற்பின் சிறப்பை மதித்து அவள் விரும்பிய இன்பத்தை நல்க மன்மதன் போன்று அழகிய வடிவாகத் தன்னை மாற்றிக் கொண்டான். அவள் ரதியானாள்.

“மின்னே! உனக்கு வேண்டும் வரம் கேள்” என்றான்’

“நின் நேயம் என்றும் நிலைத்து இருக்க வேண்டும்” என்றாள்.

இருவரும் இணைந்து ஈடற்ற இன்பம் அடைந்தனர்; இதயம் கலந்து இருவரும் உணர்வால் ஒன்று பட்டனர்; குன்று என வடிவம் எடுத்தால் அவள் நதியாக அவனைத் தழுவினாள்; அவன் மரமாக வடிவு எடுத்தால் அவள் கொடியாகத் தழுவினாள்; மேகமும் மின்னலும் என அவன் ஆகத்தைக் தழுவினாள்; இப்படிப் பல பிறவி–

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/84&oldid=1048323" இலிருந்து மீள்விக்கப்பட்டது