பக்கம்:மாபாரதம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

மாபாரதம்

ஒரு உத்தம சந்நியாசி வந்திருக்கிறார் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. மன்னர்கள் எல்லாம் அவன் காலடியில் விழுந்து வணங்கித் திருநீறும் குங்குமமும் பெற்றுச் சென்றனர். கண்ணனின் மூத்தவனான பலராமனும் அவனை வணங்கி வாழ்த்துப் பெற்றுச் சென் றான். கண்ணன் மட்டும் உண்மை அறிந்து சிரித்துப் பேசி அவன் நோக்கத்தைத் தெரிந்துகொண்டான் சுபத்திரை அங்கு வந்து போனாள். சுபத்திரையைச் செல்வக் கோமகனாகிய துரியனுக்கு மணம் செய்விக்க வேண்டும் என்று பலராமன் விரும்பினான். அதனால் இவர்கள் திருமணத்துக்கு அண்ணன் இசையான் என்பதால் கண்ணன் அவனுக்கு அறிவுறுத்தினான்.

“அடிகளே, உம்முடைய நாடகம் தொடரட்டும்; இங்கு எம்மவர் உம் மணத்துக்கு இசைவு தரமாட்டார்கள். அதனால் நீயே முயன்று அவளைக் காதலித்து மணம் செய்து கொண்டு உம் நகருக்கு அழைத்துச் செல்க” என்று அருச்சுனனுக்கு அறிவித்தான்.

சுபத்திரையை அழைப்பித்து “மழைக்காலம் வந்து விட்டது. முனிவர் நான்கு மாதம் இங்குத் தங்குவார். அவர் இடும் பணிகளைப் பரிவுடன் நீ புரிவாயாக” என்று பணித்திட்டான்.

அதனால் அவளோடு நெருங்கிப் பழக அவனுக்கு வாய்ப்புக் கிடைத்தது. நல்லிலக்கணம் பல உடைய அவன் மேனியின் தோற்றம் அவன் ஏற்றத்தைக் காட்டியது. வில் தழும்பு பெற்ற கைவிரல்களையும் பரந்த மார்பையும் வீங்கிய தோள்களையும் கண்டு இவன் ஒரு மாவீரனாக இருக்க வேண்டும் என்று மதித்தாள்.

ஒரு நாள் அவன் திருவடிகளில் விழுந்து வணங்கி “எங்கெங்கே வண்புனல் ஆடுதற்குச் சென்றிருந்தீர்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாபாரதம்.pdf/95&oldid=1036095" இலிருந்து மீள்விக்கப்பட்டது