பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"அவன் மேலும் வல்லமை பெறுவதற்காக அரக்கர்களின் மூல நாயகியான மூளியம்மனை நோக்கித் தவமிருக்கிறான். மூளியம்மனுக்குப் பலிகொடுக்கவே தங்கள் மகளைக் கேட்க வந்திருக்கிறான்.

“மன்னர்பிரானே, நீங்கள் மனமொப்பி உங்கள் மகளைக் கொடுத்தால்தான் மூளியம்மன் அந்தப்பலியை ஏற்றுக்கொள்வாள். நீங்கள் கொடுக்க மறுத்துவிட்டால் அவன் உங்கள் மகளைத் தூக்கிக் கொண்டு போக முடியாது. ஆகவேதான் அவன் அப்பொழுதே உங்கள் மகளைத் தூக்கிக் கொண்டு போகவில்லை.

"ஆனால், உங்கள்மகளைப் பெறுவதற்காக அவன் உங்களுக்குப் பல கேடுகளைச் செய்வான். அவன் செய்யும் கேடுகளுக்குப் பயந்து நீங்கள் உங்கள் மகளைக் கொடுத்துவிட்டாலும் அதனால் நன்மை வரப்போவதில்லை. மூளியம்மனின் வரத்தால் பெரும் வல்லமையடையும் உருத்திர கோபன் தேவதைகளையும் அடக்கியாள முற்படுவான். தேவதைகளை அடக்கும் வல்லமை பெற்றுவிட்டால், அவன் உலத்தில் தன் விருப்பப்படி யெல்லாம் தீமை செய்யத் தொடங்கிவிடுவான். அதனால் உலகத்திற்குப் பெருங் கேடே யுண்டாகும்" என்றார் குருக்கள்.

23