பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/101

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

83

நிஜத்தைப் பேசுகிறதென்பது தெரியவில்லை. எஜமான் என் மேல் கோபிக்காமல் விஷயத்தைச் சொன்னால், அதற்குச் சம்பந்தப்பட்ட சகலமான உண்மையையும் எனக்குத் தெரிந்த வரையில் திரிகரண சுத்தியாக நான் உடனே வெளியிடுகிறேன்” என்று நிரம்பவும் நிதானமாகவும் பணிவாகவும் கூறினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் மிகுந்த ஆச்சரியம் அடைந்து தம் மனதில் பொங்கியெழுந்த கோபத்தையும் வெறுப்பையும் வெளியில் காட்டாமல் அடக்கிக் கொண்டு, “பிள்ளையவாள்! நீர் பேசுவதெல்லாம் கேட்பதற்கு அழகாயிருக்கிறது என்பது வாஸ்தவமே. ஆனால் அதனால் மனசில் மாத்திரம் கொஞ்சமாவது திருப்தி என்பதே உண்டாகவில்லை. அதுதான் சங்கடமாக இருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும். நீர் மற்ற எந்த விவரத்தையும் என்னிடம் சொல்ல வேண்டாம். உம்முடைய தமையனார் இப்போது எங்கே இருக்கிறார் என்பதை மாத்திரம் நீர் நிச்சயமாகச் சொல்லிவிட்டால், அதுவே போதுமானது. நான் உடனே போய்விடுகிறேன். இந்த விஷயத்தில் நான் உம்மைச் சம்பந்தப்படுத்தாமல் தப்ப வைக்கிறேன்; அவரை மாத்திரம் பிடித்துக்கொண்டு போய்விடுகிறேன். அவர் ஆயிசு காலம் முடிய மறைந்து இந்த உலகத்தில் இருக்க முடியாது. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒரு நாள் அவர் அகப்பட்டுக் கொள்வது நிச்சயம். அவருடைய தண்டனைக் காலம் ஒன்றுக்கு இரண்டாகப் பெருகுவதும் நிச்சயம். ஆனால் நாங்களே சிரமப் பட்டு அவரைக் கண்டு பிடித்தால், அவரோடு அவரை விடுவித்த மற்றவர்களும் அவருக்குத் துணையாக ஜெயிலுக்குப் போக நேரும். அதில் நீரும் ஒருவர்தான் என்பது சொல்லாமலே விளங்கும். ஆனால், நீரே உம்முடைய தமையனாரை மாத்திரம் காட்டிவிட்டால், நீர் தப்பித்துக் கொள்ளலாம். நான் சொல்வதில் உமக்கு ஏற்படக்கூடிய லாப நஷ்டங்களைச் சீர் துக்கிப் பார்த்து சரியான வழியில் நடந்து கொள்ளும்” என்றார்.

அவரது சொற்களைக் கேட்டு முற்றிலும் பிரமிப்படைந்து திடுக்கிட்டவன் போலத் தோன்றிய மாசிலாமணி, “எஜமானே! தாங்கள் சொல்வது ஆச்சரியத்திலும் பரம ஆச்சரியமாக