பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/108

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

மாயா விநோதப் பரதேசி

ஏதாவது மறைவான இடம், சூட்சுமமான வழிகள் முதலியவை எங்காகிலும் இருக்கின்றனவோ என்று நிரம்பவும் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொண்டே போனார். வீட்டின் உச்சியில் மொட்டைமெத்தை தான் இருந்தது. அதற்குப் போக வழி வைக்கப்படாமல் இருந்தமையால், கீழே வீதியிலிருந்து பார்த்தாலே, உச்சியில் ஒன்றுமில்லை என்பது நன்றாகத் தெரிந்தது. ஆகையால், போலீசார் மேலே ஏறி உச்சியில் போய்ப் பார்ப்பது அநாவசியம் என்று தீர்மானித்துக் கொண்டு மாசிலாமணியோடு கீழே இறங்கினார்கள்.

கீழே வந்த உடனே இன்ஸ்பெக்டர் மாசிலாமணியை நோக்கி, “என்ன ஐயா இது மாயமாக இருக்கிறதே! ஆசாமி எங்கேயும் காணப்படவில்லையே! எங்கேயோ தந்திரமாக ஒளிந்து கொண்டு இருக்கிறாரே! எங்கேயாவது சுவருக்குள் சந்துவைத்துக் கட்டி மறைத்திருக்கிறீரா?” என்று புன்னகையோடு கேட்க, மாசிலாமணி ஆத்திரமாகப் பேசத் தொடங்கி, “என்ன, எஜமானே! நான் வயிற்றைக் கிழித்துக் காட்டினால் கூட, அதைக் கண்கட்டு வித்தை என்றால், பிறகு நான் எப்படித்தான் தங்களைத் திருப்தி செய்கிறது? சுவருக்குள் இடைவெளி விட்டிருப்பதாகத் தாங்கள் சந்தேகித்தால், அதையும் ஆராய்ந்து பார்த்துக் கொள்ளலாம். ஒவ்வொரு சுவரின் கனத்தையும் அளந்து பார்த்துக் கொள்ளுங்கள். எவ்வளவு கனம் இருக்க வேண்டுமோ அதற்கு மேல் அதிகமாக எவ்விடத்திலாவது இருக்கிறதா என்று பாருங்கள். சுவர்களில் இருந்த அலமாரிகளை எல்லாம் கூடத் திறந்து காட்டிவிட்டேன். இன்னம் தங்களுக்குத் திருப்தி ஏற்படாவிட்டால் தாங்கள் உத்தரவு கொடுங்கள். உடனே ஆயிரம் ஆட்களை விட்டு, இரண்டு உப்பரிகையுள்ள இந்த மாளிகையின் மூன்று கட்டுகளையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிடச் செய்கிறேன். இதை மறுபடிகட்ட சுமார் 50-ஆயிரம் ரூபாய் பிடிக்கும் தங்களுடைய சந்தேகம் நிவர்த்தியாவதே எனக்குப் பெரிய காரியமன்றி, இந்த 50-ஆயிரம் ரூபாய் ஒரு பொருட்டல்ல. என்ன சொல்லுகிறீர்கள்? அப்படியே செய்யட்டுமா?” என்று நிரம்பவும் துடியாகப் பேசினான்.