பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/113

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

95

உம்முடைய மனம் எவ்வளவு தூரம் பதறும். பணத்தைப் பறி கொடுத்த உம்முடைய வயிறு எப்படி எரியும்! ஆகையால், நீங்கள் உங்களுடைய சுயநலத்தை மாத்திரம் கருதக்கூடாது. பொது ஜன நன்மையையும் கருதவேண்டும். நாங்கள் எல்லா ஜனங்களுடைய உரிமைகளையும், உடைமைகளையும் பாதுகாக்கப் பாடுபடுகிறவர்கள். ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்கிறவரைத் தண்டனைக்குக் கொண்டு வரும் ஜனோபகாரமான காரியத்திற்கு உதவியாய் இருந்து நீதி வழுவாமல் பரிபாலனம் செய்யப் பயன்படுகிறவர்கள். உங்களுடைய தமையனார் ஜெயிலில் இருந்தால், எங்களுக்கென்ன? வெளியில் இருந்தால் எங்களுக்கென்ன? நாங்கள் ஏதாவது அவருக்குச் சாப்பாடு போடுகிறோமா? ஒன்றுமில்லை. இந்த விஷயமெல்லாம் உமக்குத் தெரியாததல்ல. ஆகையால் இந்த விஷயத்தில் எங்களுக்கு ஒவ்வொருவரும் தங்களால் ஆன உதவியைச் செய்ய வேண்டும். நீரும் அப்படியே செய்ய வேண்டும் என்று தான் நான் வந்தது முதல் உமக்குச் சொல்லுகிறேன். அப்படிச் செய்தால் அதில் உமக்கு அனுகூலமும் இருக்கிறது. எப்படி என்றால் நீர் இதில் சம்பந்தப்படவில்லை என்று உம்மை நான் தப்ப வைத்துவிடலாம். நீர் கடைசி வரையில் ஒரே பிடிவாதமாகப் பேசிக்கொண்டே போனால், இதற்காக நான் இப்போது உமக்கு எதுவும் செய்யாவிட்டாலும் இன்னம் இரண்டொரு தினத்தில், எப்படியும் எங்களுக்குத் தேவையான புலமும் சாட்சியமும் கிடைத்துவிடும். அதன் பிறகு உமக்குக் கெடுதல் நேரும். தஞ்சை ஜில்லா சூபரின்டென்டெண்டு உடனே ஒரு விளம்பரம் தயாரித்து, உம்முடைய தமையனார் இருக்கும் இடத்தைத் தெரிவிப்பவருக்கு ஐயாயிரம் ரூபாய் சன்மானம் கொடுப்பதாக வெளியிட்டிருக்கிறார். அந்தத் தொகையும் உமக்குக் கிடைக்கும்படி நான் செய்கிறேன். ஆனால் நீர் பணக்காரர்; அந்தத் தொகை உமக்கு ஓர் லட்சியமல்ல. ஆனால், மற்றவருக்கு அது போவதைவிட, உமக்குத்தான் வரட்டுமே. நீர் அதை வாங்கி, பரதேசிகளுக்குச் சாப்பாடு போடலாம் அல்லவா” என்றார்.