பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

மாயா விநோதப் பரதேசி


அதைக் கேட்ட மாசிலாமணி, “எஜமானே! தாங்கள் சொல்வதெல்லாம் நியாயமான விஷயங்கள் என்பதற்குத் தடையில்லை. ஆனால் ஒரு விஷயத்தில் மாத்திரம் தாங்கள் ஒரே பிடிவாதமாக ஓர் அபிப்பிராயம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் அவருடைய தம்பி ஆகையால், நான் தான் கட்டாயமாக அவரை விடுவித்திருக்க வேண்டும் என்ற முடிவை நீங்கள் வைத்துக் கொண்டு பேசுகிறீர்கள். அதுவுமன்றி, என்னைத் தவிர, இவ்வளவு அக்கறையாக அவரை விடுவிக்கக்கூடிய பந்துவாவது, சிநேகிதராவது அவருக்கு யாருமில்லை என்று நீங்கள் ஒருவேளை எண்ணிக்கொண்டும் இருக்கலாம். அதுதான் தவறு. எனக்கும் என் அண்ணனுக்கும் எப்போதும் ஜென்மப் பகை. அவருக்கு அநேக வருஷங்களாக சம்சாரம் இல்லை. ஆகையால், அவர் எப்போதும் ஏராளமான பொருளைச் செலவு செய்து அநேகம் தாசிகளைப் போஷித்து வந்தவர். ஒவ்வொருத்தியும் அவரிடத்தில் மாசத்தில் ஆயிரம் இரண்டாயிரம் பற்றுகிறவர்கள். அவருக்குத் தஞ்சாவூர் கீழ வீதியில் சாரதா என்ற ஒரு தாசி நிரம்பவும் அன்னி யோன்னியமான பழக்கம் உடையவள். அவர் சதாகாலமும் அவள் வீடே கதியாக இருந்து, லட்சக் கணக்கில் பொருளை அழித்திருக்கிறார். அவர் ஜெயிலுக்குப் போனதில் அவளுக்குத் தான் பெருத்த நஷ்டம். அவளைப் போன்றவர்கள் ஏதாவது தந்திரம் செய்து அவரை விடுவித்திருக்கலாம். அவர் இங்கே இருந்த வரையில், நான் ஒரு காசுகூடச் செலவு செய்ய, அவர் பார்த்துச் சகிக்கமாட்டார். என் விஷயத்தில் மாத்திரம் அவர் பரமலோபி. நான் அவரிடம் வெளிக்கு மாத்திரம், மகா பணிவாகவும் பயபக்தி விசுவாசத்தோடும் நடந்து வந்தேனே அன்றி, என் மனசுக்குள் அவர் எப்போது தொலைவார் என்ற எண்ணமே இருந்து வந்தது. இப்போது நான் ஜெயிலில் இருந்து வந்த பிறகுதான் நான் என் சுயேச்சையாகப் பணத்தைச் செலவு செய்கிறேன், இன்னும் எட்டு வருஷத்திற்கு நான் வைத்தது சட்டமாக இருந்து ஏராளமான பொருளைச் செலவு செய்து, என் இஷ்டம் போல இருக்கலாம் என்பதே என்னுடைய பிரியம். அப்படியன்றி, அவரை நான் விடுவித்தால், மறுபடியும் அவர் எல்லாப் பொருள்களுக்கும் எஜமானராகி விடுவார். பிறகு என்