பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

மாயா விநோதப் பரதேசி

என்னுடைய மற்ற விடுகளுக்கு எதிரிலும் ஜெவான்கள் நிற்க வைத்திருக்கிறான் போலிருக்கிறது” எனக் கூறினான்.

இடும்பன் சேர்வைகாரன், “இந்த போலீஸ் நாய்களுக்கு வேறே என்ன தெரியும் செத்த பிணங்களை அடிப்பதில் அவர்கள்தான் அசகாய சூரர்கள் ஆயிற்றே! அதுவும் நம்முடைய அண்ணாவையங்கார் இருக்கிறான் அல்லவா அவனை பிரகஸ்பதி என்று தான் சொல்ல வேண்டும். என்னவோ அவனும் காக்கை பிடித்துப் பிடித்து இவ்வளவு பெரிய உத்தியோகத்துக்கு வந்துவிட்டான். வாய் உருட்டல் தான் பலமாயிருக்குமே யொழிய, அவனால் ஒரு காரியம் கூடச் சாய்கிறதில்லை. அவன் வந்து கொஞ்ச நேரம் கத்தி விட்டுப் போனால் போகட்டும். அதனால் நமக்கு என்ன நஷ்டம்? ஒன்றுமில்லை” என்றான்.

மாசிலாமணி ஏளனமாக நகைத்து, “இந்த அண்ணாவையங்கார் இடத்தில் இன்னொரு திறமை இருக்கிறது பார்த்தீரா? நான் நிமிஷத்துக்கு நிமிஷம் புதிய புதிய சலவை வேஷ்டிகள் மாற்றி மாற்றிக் கட்டுகிறேன். அதில் எப்படியோ அழுக்கு அடைந்து விடுகிறது. இந்த இன்ஸ்பெக்டருடைய உடுப்பும் பூட்சுகளும் எப்போது பார்த்தாலும் ஒரே மாதிரியாக ஓர் அற்ப மாசுகூடப் படியாமல் மினுமினுப்பாக மின்னுகின்றன பார்த்தீரா? அந்த விஷயத்தில் இந்த இன்ஸ்பெக்டருக்கு நிகர் யாரும் சொல்ல முடியாது” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், “மற்ற யோக்கியதை எதுவும் இல்லாவிட்டாலும், அதாவது இல்லாவிட்டால், அவனை யார் மதிக்கப் போகிறார்கள். அவன் ஆடம்பரமான உடைகளை அணிந்து மேலே நிமிர்ந்தபடி அமர்த்தலாகவும் அலட்சியமாகவும் பார்த்தபடி மற்றவரிடம் பேசுவதைக் கண்டாலே, அவனிடம் ஏதோ பிரமாதமான சரக்கு இருக்கிறதென்று எல்லோரும் நினைத்து அவனைக் கண்டு பயப்படுவார்கள். இந்தப் போலீஸ் முக்கால் வாசிப்பேர் அப்படிப்பட்ட வெளிப்பகட்டு ஆள்கள்தான் என்பது பிரசித்தமான விஷயந்தானே” என்றான்.

மாசிலாமணி, “இருந்தாலும் அரை வாயன் கால் வாயன் எல்லாம் இந்த அண்ணாவையங்காரோடு பேசி வெல்வது