பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

103

கஷ்டந்தான். நான் எவ்வளவோ தந்திரமாகப் பேசுகிறேன். அவன் மடக்கி மடக்கி ஆளைக் கலக்கிவிடுகிறான். இருந்தாலும், அவனுடைய ஆடம்பரம் எல்லாம் என்னிடம் சாயவில்லை. பேசாமல் வாயை மூடிக்கொண்டு போய்விட்டான். இரண்டொரு தினங்களில் ஏதோ துப்பு விசாரித்து உண்மையைத் தெரிந்துகொண்டு அதன்மேல் என்னைப் பிடித்துக்கொள்ளப் போகிறதாகவும் பயமுறுத்தினான்” என்றான்.

இடும்பன் சேர்வைக்காரன், “அப்படியே செய்து கொள்ளட்டும்! யார் அவனைத் தடுத்தார்கள்!” என்றான்.

மாசிலாமணி, “யாரும் தடுக்கவில்லை. இப்போது இருக்கும் நிலைமையில் நாம் இவர்களைப் பற்றிக் கொஞ்சம் கூட பயப்பட வேண்டிய அவசியமே இல்லை. இவர்கள் எவ்வளவுதான் பகீரதப் பிரயத்தனம் செய்து தலைகீழாய்க் குட்டிக்கரணம் போட்டாலும், என் அண்ணன் தப்பிய விஷயத்தில் இவர்கள் என்னைச் சம்பந்தப்படுத்த முடியவே முடியாது. கடைசி வரையில் நான் இந்த ஊர்த் தந்தி ஆபீசைப் பற்றித்தான் கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், அது நாம் எதிர்பார்த்தபடியே நிறைவேறிவிட்டது. தஞ்சாவூரில் அவர்கள் காலை சுமார் 10 அல்லது 10-30 மணிக்குத் தந்தி கொடுத்திருக்கலாம். அது இங்கே 11 மணிக்குள் வந்திருக்க வேண்டும். அப்படி இருக்க, இது சுமார் 1 மணிக்கு வந்ததைப்பற்றி, எப்படியும் இவர்கள் சந்தேகங் கொள்ளாமலா இருப்பார்கள். அந்த விஷயத்தில் இவர்கள் சந்தேகங்கொண்டு அதன் காரணம் என்னவென்று விசாரித்தாலும் விசாரிப்பார்கள். விசாரித்தால், அதில் உண்மை வெளிப்படப் போகிறதில்லை. பார்த்துக் கொள்ளலாம். இந்த விஷயம் இருக்கட்டும். மன்னார்கோவில் சங்கதிகள் எல்லாம் எப்படி இருக்கின்றன? விசாரித்துக் கொண்டு வந்தீரா? நம்முடைய ஆள்கள் இரண்டு பேரும் எதிரிகள் சந்தேகப்படாதபடி இருந்து எல்லாச் சங்கதிகளையும் கிரகித்து வருகிறார்களா” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன், “ஆகா! நம்முடைய ஆள்கள் இரண்டு பேரும் சாதாரண ஆள்கள் அல்ல. அந்த திகம்பரசாமியார் அல்ல, அவரைவிட ஆயிரம் மடங்கு அதிக திறமைசாலி