பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

111


இ. சேர்வைகாரன்:- ஏது எஜமான் என்மேல் கூட சந்தேகங் கொள்ளுகிறது போல் இருக்கிறதே. நான் நேரில் கண்ட சங்கதியையும், அப்போது என் மனசு நினைத்ததையும் உள்ளபடியே உங்களிடம் வெளியிட்டேன் அன்றி, அவன் விஷயத்தில் நான் இரக்கங்கொண்டு அவனை விட்டுவிடப் போவதாகச் சொன்னேனா? அப்படி ஒன்றும் சொன்னதாக ஞாபகமில்லையே. காரியத்தை எப்படி முடிக்க வேண்டும் என்று நீங்கள் உத்தரவு கொடுக்கிறீர்களோ, அப்படியே நான் நிறைவேற்றி வைக்கத் தடை இல்லை. அதனால், என் உயிரும், என் ஆட்களின் உயிரும் போனால் கூட நான் பார்க்கக் கூடியவனல்ல. உங்களுக்கு ஏதோ ஓர் யோசனை தோன்றிய தாகச் சொன்னீர்களே, அதை வெளியிடுங்கள். அதன்படி நான் நடந்து கொள்ளுகிறேன்.

மாசிலாமணி:- வேறொன்றும் இல்லை. இப்போது நீர் சில சங்கதிகள் சொன்னீர் அல்லவா, வருகிற புதன்கிழமை அன்று மன்னார்குடியார் நிச்சயதார்த்தத்திற்காக சென்னைப் பட்டணம் போகிறார்கள் என்று சொன்னர் அல்லவா? அப்போதே நாம் நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றிவிடலாம் என்பது என் எண்ணம்.

இ. சேர்வைகாரன்:- எந்த விதமாய் நிறைவேற்றுகிறது?

மாசிலாமணி:- அவர்கள் அன்றைய தினம் இரவில் போட் மெயிலில் அல்லவா போகப் போகிறார்கள்?

இ. சேர்வைகாரன்:- ஆம்; அப்படித்தான் சொல்லக் கேள்வி.

மாசிலாமணி:- சரி; அவர்களுக்காக மன்னார் குடியில் ஆறு முதல் வகுப்பு வண்டிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள் அல்லவா? -

இ. சேர்வைகாரன்:- ஆம்.

மாசிலாமணி:- அந்த வண்டிகள் எல்லாம் மன்னார்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்தே அவர்களை எல்லாம் ஏற்றிக்கொண்டு போகும். அவர்கள் நீடாமங்கலம், திருவாரூர், மாயூரம் ஆகிய மூன்று ஜங்ஷன்களின் வழியாக ரயில் மாறிக் கடைசியில் போட்