பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

மாயா விநோதப் பரதேசி

பகிரங்கத்துக்கு வரும். போலீசார் பெட்டியை வைத்துக்கொண்டு விசாரணை செய்வார்கள். ஒரு வேளை பாம்புப் பிடாரர்களை எல்லாம் தேடிப் பிடித்து விசாரணை செய்வார்கள். சன்மானம் கொடுப்பதாக விளம்பரம் செய்வார்கள். தற்செயலாக அந்த விவரமெல்லாம் நம்முடைய பாம்புப் பிடாரனுக்குத் தெரிந்தால், அவன் பணத்தாசை பிடித்து, இன்னார்தான் தன்னிடம் பாம்புகளை வாங்கிக் கொண்டு போனது என்ற சங்கதியை வெளியிட்டுவிட மாட்டானா? அவன் இப்போது நம்மிடம் உறுதியாய் இருப்பதாக ஆயிரந்தான் சொன்னாலும் அப்படிப்பட்ட காதறுந்த நாய்களை எல்லாம், நாம் கடைசிவரையில் நம்பி இருப்பது அபாயகரமானது. பணம் என்றால், அந்த அன்றாங்காய்ச்சி நாய் எதையும் செய்து விடுமே! அந்த விஷயத்தில் நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்வது அத்யாவசியமானது அல்லவா?

இ. சேர்வைகாரன்:- ஆம்; அது நிரம்பவும் முக்கியமான விஷயந்தான். அதை நான் யோசித்தே ஜாக்கிரதையாகக் காரியத்தைச் செய்திருக்கிறேன். நான் என்னுடைய சுய ரூபத்தோடு போய் அவனிடம் பழக்கம் செய்து கொள்ளவில்லை. நான் ஒரு சாயப்புவைப் போல உடைகளைத் தரித்து தாடி முதலியவைகளை வைத்துக் கொண்டு போய் அவனை இரண்டு மூன்று தடவை பார்த்துப் பேசி, இந்த ஏற்பாட்டைச் செய்து விட்டு வந்திருக்கிறேன். நான் உண்மையில் யாரோ ஒரு சாயப்பு என்றே அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஆகையால், ஒருவேளை பின்னால், அவன் ஏதாவது சங்கதியை வெளியில் விட்டால்கூட, யாரோ ஒரு சாயப்பு தான் பாம்புகளை வாங்கிக் கொண்டு போனார் என்று அவன் சொல்லப் போகிறான். அதற்கும் நமக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லாமல் போகிறது.

மாசிலாமணி:- அதெல்லாம் சரிதான். நீர் பெட்டியை அனுப்பினால், அதை திகம்பர சாமியார் எதற்காக உடைத்துப் பார்க்கப் போகிறான்? அப்படியே உடைத்துப் பார்க்கப் பிரியப்பட்டாலும், அவனுக்கு வேறே ஆள்கள் இல்லையா? எவனையாவது விட்டுப் பெட்டியைத் திறந்து பார்க்கச் சொல்லப்