பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

137

அவளது மனதில் புதைபட்டு இருள் அடைந்து மறைந்து கிடந்த பழைய சம்பவங்களின் நினைவுகள் எல்லாம் பிரகாசமடைந்து ஒன்றன் பின் ஒன்றாய் அவளது அகக்கண்ணாகிய அரங்க மேடையின் மேல் தோன்றிக் காட்சிக் கொடுக்க ஆரம்பித்தன. தனது குழந்தைப் பருவம் தொட்டு, தான் திருக்கண்ணமங்கை என்ற ஊரில் அஞ்சலை, நமசிவாய பிள்ளை ஆகிய இருவரையும் முறையே தாய், தகப்பன் என்று மதித்து, அவர்களது கொடுங்கோன்மையில் இருந்து உழன்று வந்த நாட்களின் நினைவும், தான் மாசிலாமணிக்கு மனைவி ஆக மறுத்ததன்மேல் அவர்கள் தன்னை வைது அடித்துப் பட்டினி போட்டுப் பலவகையில் வருத்திய நினைவுகளும் கண்னெதிரில் அப்போதே நிகழும் நாடகக் காட்சிகள் போலத் தோன்றத் தொடங்கின. கடைசியில் தான் அவர்களது வீட்டைவிட்டு, ஒரு. நாள் இரவில் வெளிப்பட்டுத் தனிவழி நடந்து மன்னார்குடியை நோக்கிச் சென்றதும், இடைவழியில் சில முரடர்கள் தன்னைப் பிடித்து இறுகக் கட்டித் துக்கிக் கொண்டு போக முயன்றதும், அக்காலை திகம்பரசாமியார் என்ற புண்ணியவான் திடீரென்று தோன்றி அதியாச்சரியகரமாகத் தன்னை அந்தப் பயங்கரமான விபத்தில் இருந்து தப்பவைத்து அழைத்துக் கொண்டு போனதும், பிறகு சத்திரத்தில் மாசிலாமணி நமசிவாய பிள்ளை முதலியோர் வந்து மறுபடி தன்னைத் தூக்கிக்கொண்டு போக எத்தனித்ததும், அப்போது கண்ணப்பா என்ற புருஷ சிங்கம் தோன்றித் தன்னை மீட்டுத் தனது மனதையும் காதலையும் ஒருங்கே கொள்ளை கொண்டு போனதும், அதன் பிறகு தான் சொர்க்க போகத்தை அடைந்தது போல் வேலாயுதம் பிள்ளையினது மாளிகையில் செல்வமும் சீருமாய் இருந்து வந்ததும் நன்றாக நினைவிற்கு வந்தன. அந்தக் காலத்தில் சட்டைநாத பிள்ளை முதலியோர் ஏராளமான ஆட்களோடு திடீரென்று தோன்றித் தன்னைப் பலாத்காரமாக அபகரித்துக் கொண்டு போய்க் கும்பகோணத்தில் சிறை வைத்தது, அவ்விடத்தில் தான் மூன்று நாட்கள் வரையில் பட்டினி கிடந்தது, மாசிலாமணி, அஞ்சலை முதலியோரது கொடுமையைச் சகிக்கமாட்டாது உயிர் துறக்க எண்ணி முடிவில் கிணற்றிற்குள் வீழ்ந்தது, பிறகு உயிர்