பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

147

தென்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தடுப்பதற்காக சமுத்திரத்தின் நடுவில் போய் இருந்த கதையை நீ படித்தாயே, அதை மறந்துவிட்டாயா? அவன் அவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தும் அந்த விபத்தை விலக்க முடியாமல் போய்விட்டதல்லவா? ஆகையால் நாம் எதைப் பற்றியும் முன்னால் கவலைப்பட்டு மனசைப் புண்படுத்திக் கொள்வதே மதியீனம் என்பது என்னுடைய கைகண்ட அனுபவம். வருங்காலத்தில் நமக்கு என்ன நேரப்போகிறதென்பது நமக்குத் தெரிந்தால் நாம் அதைப்பற்றி அஞ்சிக் கலங்கி அநாவசியமான மனோபாதைக்கு ஆளாவோம் என்று தெரிந்து கொண்டுதான் கடவுள் நமக்கு எதிர்கால ஞானம் இல்லாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். இனி என்ன நடக்கப் போகிறது என்று நாம் ஜோசியத்தின் மூலமாவது, நம்முடைய சுய யூகத்தின் மூலமாவது தெரிந்து கொண்டு அவஸ்தைப்படுவதெல்லாம் வீண் பிரயாசையே அன்றி வேறல்ல. நமக்கு மிஞ்சி என்ன துன்பம் வந்தாலும், அதை நாம் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்ற உறுதியோடும் நாம் எதைக் குறித்தும் கவலைப்படாமல் எல்லாப் பொறுப்பையும் கடவுளின் மேல் போட்டு விட்டு இருந்தால், பிறகு நடப்பது நடக்கட்டும். இனி இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டு நல்ல மனசைப் புண்படுத்திக் கொள்ளாதே” என்று கூறி அவளது மனதை திடப்படுத்துபவன் போல, அவளது முதுகில் அன்பாகத் தட்டிக் கொடுத்தான்.

அதைக் கேட்ட பெண்பாவையின் கண்கள் கலங்கின. மனமும் முகமும் இளகின. அவள் நிரம்பவும் கொஞ்சலாகப் பேசத் தொடங்கி, “கவலைப்பட வேண்டாம் என்று நீங்கள் சுலபமாக உத்தரவிட்டு விட்டீர்கள். உங்களுடைய உத்தரவை சிரசாக வகிக்க வேண்டும் என்ற உறுதியும் ஆசையும் என் மனசில் பரிபூரணமாக உண்டாகின்றன. ஆனால், இந்தப் பாழும் மனசு நம்முடைய கட்டில் நில்லாமல் எதைக் குறித்தாவது நினைத்துக் கவலைப்பட்டு எப்போதும் சஞ்சலமடைந்து கொண்டபடியே தான் இருக்கிறது. நாம் வேறே எதை அடக்கினாலும் அடக்கலாம் போலிருக்கிறது, எவ்வளவு அரிய காரியத்தைச் சாதித்தாலும் சாதிக்கலாம் போலிருக்கிறது, இந்த மனசை அடக்கி ஒரு நிலையில்