பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

151

அதைக் கண்ட கண்ணப்பா, “நீ சாப்பிட்டால், எனக்கு இல்லாமல் போய்விடப் போகிறதே என்ற பயத்தினால் நீ சாப்பிடமாட்டேன் என்கிறாயா? எனக்கு இல்லாமல் போனாலும் போகட்டும். அதைப்பற்றி எனக்குக் கொஞ்சமும் விசனமில்லை. எப்டியாவது நீ சாப்பிட்டால், அது தான் எனக்கு ஆனந்தம். உடனே என் பசி தாகம் முதலிய எல்லா உபாதைகளும் நிவர்த்தியாய் மனம் குளிர்ந்து போகும்” என்றான்.

வடிவாம்பாள்:- மனித சுபாவம் உங்களுக்குத் தெரியாததல்ல. நான் எதையும் சாப்பிடாதிருக்கிற வரையில் நீங்கள் என்னை வற்புறுத்துவீர்கள்; நான் சாப்பிட வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள்; நான் சாப்பிடுவதைக் கண்டு ஆனந்தமும் அடைவீர்கள். நான் உங்களோடு கூட உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டால், அதன் பிறகு அது சர்வசாதாரணமான காரியம் ஆகிவிடும். அதனால் உங்கள் மனசில் ஆசையாவது இன்பமாவது உண்டாகப் போகிறதில்லை. அரைக்காசு கொடுத்து அழச்சொல்லி, ஒரு காசு கொடுத்து ஓயவைக்க வேண்டும் என்று ஜனங்கள் சுலோகம் சொல்லுவார்கள். அதுபோல, கொஞ்ச நாளான பிறகு இவளை ஏனடா சாப்பிடச் சொன்னோம். இவள் நம்மைத் தனியாக விட்டுப்போக மாட்டாளா என்று ஆகிவிடும் — என்று வேடிக்கையாகக் கூறி நகைத்தாள்.

அதைக் கேட்ட கண்ணப்பாவும் சந்தோஷமாகச் சிரித்து, “என்ன வடிவூ! நீ கூட இப்படிப் பைத்தியக்காரி போலப் பேசுகிறாயே! நம்முடைய வீட்டில் சாமான்களுக்கு ஏதாவது குறைவுண்டா? அதிக சாமான்கள் செலவாகிப் போகின்றனவே என்று உன்னை யாராவது கேட்கப் போகிறார்களா? நீ சாப்பிட்டுக் குறைந்து போய்விடுமா? அப்படித்தான் நீ என்ன ராக்ஷசியா? நீ எவ்வளவு சாப்பிடக்கூடியவள் என்ற நிதானம் தெரியாதா? நம் இருவருக்கும் எவ்வளவு தேவையோ, அவ்வளவு எடுத்து வந்து வைத்துக் கொண்டால், அது சரியாய்ப் போகிறது. அப்படி இல்லாமல், அதனால் எனக்குக் குறைவுபட்டாலும், அல்லது, இல்லாமல் போனாலும், அதை நான் ஒரு பொருட்டாக