பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

157

அடங்கிப் பணிவாக நடந்து, வீட்டு அலுவல்களை எல்லாம் செய்யும் விஷயத்தில் எவ்வளவோ பாடுபட்டு இரவு பகல் உழைத்து நல்ல பெயர் எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு தாசி எல்லாக் கட்டுப்பாட்டையும் விலக்கிவிட்டு எவருக்கும் அடங்காமல் சுயேச்சையாக நடந்து கண்டது காட்சி கொண்டது கோலமாக இருக்கிறாள். குடும்ப ஸ்திரீயாய் இருப்பதைவிட தாசியாய் இருப்பது சுலபமானது; இன்பமுடையதாகத் தோன்றுவது. அப்படி இருந்தும் நூற்றுக்குத் தொண்ணுற்றென்பது பேர் சகல கஷ்டங்களுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உள்பட்டு குடும்ப ஸ்திரீயாக இருப்பதையே நலமாகக் கொள்கிறார்கள். அற்பத்திலும் அற்பமான எண்ணிக்கை உள்ளவர்களே தாசியாக மாறுகிறார்கள். இதற்குக் காரணம் என்ன? உலகத்தில் பெரும்பாலோரான ஸ்திரீகள் புருஷருக்கு அடங்காமல் அவர்களைக் கட்டிக்கொள்ளாமல் சுயேச்சையாக இருந்து வாழ்வதை மேற்கொள்ளக் கூடாதா? தாசிகளின் சுயேச்சையான வாழ்வு போலி வாழ்வே அன்றி வேறல்ல. தாசியாகப் போனாலும் விபசார குணமுள்ள புருஷர்களுடைய சேர்க்கை அவர்களுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. குடும்ப ஸ்திரீகள் தாலிகட்டின ஒரு புருஷனுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி நடக்க வேண்டியவளாக இருக்கிறாள். தாசியோ தன்னை நாடிவரும் நூற்றுக்கணக்கான புருஷர்களுக்கு எல்லாம் அடங்கி நடக்க வேண்டியவள் ஆகிறாள். ஒரு கட்டுப்பாட்டுக்குப் பயந்து அதைவிட்டு விலகிப் போனால், அதைவிட நூறுமடங்கு அதிகமான கஷ்டமும் துன்பமும் வந்து சேருகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. அப்படி இருந்தும், கட்டுப்பாட்டை அலட்சியம் செய்து தங்களுடைய பிரியப்படி காரியங்களை நடத்துகிறவர்களை எல்லாம், நாம் தடுக்க முடியாது. எந்தக் காலத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருந்து கொண்டுதான் இருப்பார்கள்; அவர்கள் நம்மைப் பார்த்து துரஷனைதான் செய்வார்கள். அதனால் எல்லாம் நாம் மனத்தளர்வு அடையலாமா? அதை எல்லாம் நாம் பொருட்படுத்துவதே நம்முடைய யோக்கியதைக்குக் குறைவு. அன்னிய தேசத்தாரைப் பார்த்துக் கெட்டுப் போகிறவர்கள் போகட்டும்.