பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

159

பட்டணங்களில் போய் அடைந்து கொண்டு, உத்தியோகத்தில் மேன்மேலும் அபிவிருத்தி அடைந்து அதிகப் பொருள் தேடுவதையே புருஷார்த்தமாகக் கைக்கொண்டு நம்முடைய பழைய ஆசார ஒழுக்கங்களை எல்லாம் விட்டு சமபந்தி போஜனம், ஜாதி மத சமத்துவம் முதலிய கொள்கைகளை எல்லாம் அனுபவத்தில் நடத்திக் காட்டுகிறார்கள். சென்னப் பட்டணத்திலும் சரி, மற்ற ஊர்களிலும் சரி, நூற்றுக்கணக்கான காப்பிக் கடைகள் ஏற்பட்டுவிட்டன. நம்முடைய ஊரில் உள்ளயாக — எக்ஞங்கள் செய்த மகா மகா சிரேஷ்டர்களுடைய பிள்ளைகள் எல்லாம் தலை மயிரை வெள்ளைக்காரர்களைப் போல வெட்டி விட்டுக் கொண்டு காப்பி ஓட்டல்களில் எல்லோருடனும் ஒரே மேஜையில் உட்கார்ந்து பலகாரங்கள் சாப்பிடுகிறார்கள். அதில் இன்னொரு வேடிக்கை நடக்கிறது. நாம் எல்லோரும் நம்முடைய வீட்டில் சிறிய குழந்தைகள் சாதம் சாப்பிடும் தட்டை எச்சில் தட்டு என்று இழிவாக நினைத்து, அதை ஒதுக்குப்புரமான ஒரு மூலையில் வைக்கிறோம். ஒரு குழந்தையின் தட்டை இன்னொரு குழந்தைக்குப் போடக்கூடாதென்று நினைப்பதோடு அதை வேறே யாரும் தொடவும் கூடாதென்று வைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா; அதுபோல பட்டணத்தில் சொந்த வீடுகளில் பெண்டுகள் குழந்தைகளின் சாப்பாட்டுத் தட்டுகளை விலக்கி தூரத்தில் வைக்கிறார்கள். புருஷர்களோ காப்பிக் கடைகளில் எச்சில் என்பதையே கவனிப்பதில்லை. மற்றொருவன் வாயில் வைத்து சப்பிக் குடிக்கும் குவளையை, உடனே கொண்டு போய் ஒரு தொட்டியில் வைத்திருக்கும் தண்ணீரில் போட்டு அலம்பி, அதிலேயே காப்பி எடுத்து இன்னொரு பிராம்மணருக்குக் கொண்டு போய் வைக்கிறார்கள். அதை அவர் தம்முடைய திருவாயில் வைத்து சப்பிக்குடிக்கிறார். அது இன்னொருவருக்குப் போகிறது. இம்மாதிரி ஒரு பாத்திரத்தின் ஆயிசு முடிவதற்குள், அது கோடாது கோடி மனிதர்களின் வாய்க்குள் புகுந்து புறப்படுகிறது. இம்மாதிரி செய்து செய்து பழகிப் போனபடியால், இப்படிச் செய்வதில் ஜனங்கள் எள்ளளவும் லஜ்ஜையாவது கிலேசமாவது கொள்ளுகிறதே இல்லை. சமீபத்தில் நான்