பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

167

அரசன் முதல் சகலமானவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய தர்மங்கள் முதலியவைகள் இன்னின்னவை என்ற விஷயத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காண வேண்டுமானால், நம்முடைய திருவள்ளுவருடைய திருக்குறளுக்கு மிஞ்சிய நூல் இந்த உலகத்திலேயே இராதென்று சொல்ல வேண்டும். இன்னும் மற்றப்படி வான சாஸ்திரம், கவிகள், தர்க்கங்கள், மதவிஷயங்கள் முதலிய சகலமான துறைகளிலும் ஒப்பும் உயர்வும் அற்ற நூல்கள் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்டு ஆகாயத்தில் தனிச்சுடர் விட்டெரிந்து நிற்கும் சூரிய சந்திரர்கள் போல எக்காலத்திலும் அழியாமல் மணித்திரள்கள் போல இருந்து மங்காமல் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. அவைகளை எல்லாம் நம்மவர்கள் படிக்காமல் அலட்சியம் செய்து, மேல் நாட்டில் இருந்து வரும் குப்பைகளைப் படித்து அவற்றில் காட்டப்பட்டுள்ள போலி நாகரிகத்தைக் கண்டு மதிமயங்கி, தங்களுடைய குல ஆசாரம் மத ஆசாரங்களை அறவே விலக்கிவிட்டு இரண்டுங்கெட்ட மூடர்களாய் உழலுகிறார்களே என்பதுதான் என் மனசை வதைக்கிறது. மனிதனுக்கு இந்த உலகத்தில் பொருள் ஒன்றே பிரதானம் என்று சொல்ல முடியாது. ஒரு குறித்த மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் மற்ற சகலமான மனிதருக்கும் தான் சமம் என்று பாவித்து கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் சுயேச்சையாக நடக்க எண்ணுவது ஒருநாளும் சாத்தியமான காரியமல்ல. உலகத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தேதான் தீரும். வெள்ளைக்காரர்கள் புருஷன், பெண்ஜாதி, பிள்ளைகள் முதலிய எல்லோரும் சமமானவர்கள் என்ற கொள்கைளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பணம் உள்ளவன் பெரியவன்; அவனே பலிஷ்டன். அவனுக்கு மற்றவர் அடிமைகளாக நடக்க வேண்டும் என்ற கொள்கையை அவர்கள் அனுபவத்தில் கையாண்டு வருகிறார்கள். நம்முடைய நாட்டின் கொள்கை அதுவல்ல; பொருள் நிலைத்து நிற்பதல்ல. ஒரு மனிதன் தன்னுடைய ஆயிசு காலத்திற்குள் எத்தனையோ கோடி ரூபாய்களைச் சம்பாதித்து வைத்தாலும், அவன் கடைசிக் காலமடைந்து அவனை நடைத் திண்ணையில் தூக்கிப் போடுவதற்கு முன் அவனுடைய சொத்துகளை எல்லாம்