பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மாயா விநோதப் பரதேசி

5-வது அதிகாரம்
மோகினி அவதாரம் - எதிர்பாரா விபத்து

சென்னப்பட்டனத்தின் வடமேற்குப் பாகத்திற்கு புரசைப் பாக்கம் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அது சுமார் நான்கு மைல் சுற்றளவுள்ள பாகம். அந்தப் பேட்டையில் சாதாரண ஜனங்கள் வசிப்பதற்கு ஏராளமான தெருக்களும், பெரிய பெரிய ரஸ்தாக்களும், கடைத்தெருக்களும் இருக்கின்றன. அந்தத் தெருக்களை விட்டு விலகி நாலாபக்கங்களிலும் பெருத்த தனிகர்களும் உத்தியோகஸ்தர்களும், துரைமார்களும் வசிப்பதற்கு நூற்றுக்கணக்கான பெரிய பெரிய பங்களாக்கள் அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையில் இருந்து பூந்தமல்லிக்குப் போகும் ராஜபாட்டையானது புரசைப்பாக்கத்தில் நுழைந்தே செல்லுகின்றது. ஆகையால், அந்தப் பாட்டையின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான அழகிய பங்களாக்கள் வெகுதூரம் வரையில் அமைந்திருக்கின்றன. அவற்றின் முடிவில் இன்னமும் தனவந்தர்கள் லட்சக்கணக்கில் திரவியத்தைச் செலவிட்டுப் புதிது புதிதாக பங்களாக்களையும், மாட மாளிகைகளையும் கட்டிக்கொண்டே போகிறார்கள். அந்த ராஜபாட்டை சென்னையில் ஆரம்பமாகும் இடத்தில் இருந்து சிறிது தூரம் வரையில் வீடுகளும் பங்களாக்களும் அடுத்தடுத்து நெருங்கி இருக்கக் காணலாம். அது மேற்குத் திக்கில் போகப்போக, அதன் இருபக்கங்களிலும் உள்ள பங்களாக்கள் வெகு தூரத்திற்கு ஒன்றாக இருப்பதோடு நிரம்பவும் விசாலமான தோட்டம் உத்யானவனம் மதில் சுவர்கள் முதலியவற்றால் சூழப்பட்டனவாகவும் இருக்கின்றன. அவ்வாறு காணப்படும் ஒவ்வொரு வனமாளிகையும் ஒவ்வொரு பிரத்தியேகமான ஊர் என்றே நாம் அநேகமாய் மதிக்க வேண்டும். சென்னையில் பட்டப்பகலில் நேருக்கு நேர் மோசம், புரப்பட்டு, முடிச்சவிழ்த்தல், ஏமாற்றுதல் முதலிய செய்கைகள் நடைபெறுவது சகஜமாக இருந்தாலும், இரவில் கன்னம் வைத்தோ, கூரைமேல் ஏறியோ வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கள்ளர்கள் அநேகமாய் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆதலால், ஜனங்கள்