பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180

மாயா விநோதப் பரதேசி

அப்பால் இருந்த அறையில் இன்னொரு வேலைக்காரி சமையல் சம்பந்தமான ஏதோ அலுவல்களைச் செய்து கொண்டிருந்தாள். அந்தக் கட்டிடங்களின் பின்புறத்தில் மதிலின் ஒரமாக வண்டிகள் நிற்பதற்காக ஒரு கட்டிடமும், தோட்டக்காரனும் அவனது மனைவியும் குடியிருப்பதற்காக ஒரு சிறிய விடும் காணப்பட்டன.

அத்தகைய லட்சணங்கள் வாய்ந்த ரமணியமான வன மாளிகைக்குள் நாம் சென்று பார்க்கும் தினம் சனிக்கிழமை. ஆதலால், கலெக்டர் பட்டாபிராம பிள்ளை சென்னை துறை முகத்திற்கு எதிரில் இருக்கும் தமது கச்சேரிக்குப் போயிருந்தார். அவரது ஏகபுத்திரியான மனோன்மணி என்ற மடந்தையே மேன் மாடத்தில் காணப்பட்டவள். அப்போது பகல் இரண்டு மணி வேளை. ஆதலால், அந்த மடந்தை காலை பத்தரைமணிக்கே தனது பகற் போஜனத்தை முடித்துக் கொண்டு மேன்மாடத்தில் தனது சயனக்கிரகத்தில் ஒரு கட்டிலின் மேல் உட்கார்ந்து கையில் ஒர் இங்கிலீஷ் புஸ்தகத்தை வைத்துப் படித்தபடி திண்டில் சாய்ந்திருந்தவள் அப்படியே துக்கத்தில் ஆழ்ந்திருந்து பகல் சுமார் இரண்டு மணிக்கு விழித்தெழுந்து உட்கார்ந்து கொண்டாள். மின்சார விசிறி சுழன்று, குளிர்ந்த காற்றோட்டத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தன. ஆனாலும், பகல் வேளையின் உக்கிரத்தைத் தாங்க மாட்டாதவளாய், அவள் துவண்டு துவண்டு திண்டில் சாய்ந்து கொட்டாவி விட்டுத் தலையைச் சொறிந்து கொண்டு இருந்தபடி புஸ்தகத்தை எடுத்துப் படிக்க முயற்சிப்பதும், கைகள் சோம்பிப் புஸ்தகத்தைக் கீழே நழுவவிடுவதால் அது பொத்தென்று மெத்தையின் மேல் விழுவதுமான காட்சி தென்பட்டது. அந்த மடந்தைக்கு சுமார் 17 அல்லது 18 வயது நிறைந்திருக்கலாம். அதிக உயரமாகவும், அதிகக் குள்ளமாகவும் இல்லாமல் அவள் நடுத்தர உயரம் உடையவளாய்க் கொடிபோல மெலிந்திருந்தாள். முகம் கோழி முட்டையின் வடிவம் போலச் சிறிது நீண்டு உருட்சியாக இருந்ததோடு சூட்சுமமான பகுத்தறிவும் வசீகரமும் வாய்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் அவள் ஓயாமல் இங்கிலீஷ் படிப்பதிலேயே தனது பொழுதை எல்லாம் போக்கி வந்தாள்