பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

181

ஆதலால், அதனால் அவளது மூளை பண்பட்டு வந்தது ஆனாலும், முகம் உடம்பு கை கால்கள் முதலியவற்றின் புதுத்தன்மையும், ஜொலிப்பும், தளதளப்பும் பரிபூர்ண நிலைமை அடையாமல் குறைவுபட்டுத் தோன்றின. அவளுக்குச் சகலமான செல்வங்களும் செளகரியங்களும் குறைவற இருந்தன. ஆனாலும், தேக உழைப்பு இல்லாமையாலும், உட்கார்ந்த இடத்திலேயே படித்து மூளையையும் தேகத்தையும் உருக்கிக் கொண்டிருந்தாள் ஆதலாலும், பசி ஜீரணசக்தி தேகபுஷ்டி முதலியவை குன்றிப் போனதாகத் தோன்றின. ஆகவே, அந்த மடந்தை படிப்பின் விஷயமாகச் செலவு செய்து வந்த தேகபலம், ஆகாராதிகளின் மூலமாக அவளது தேகத்திற்குக் கிடைத்த புஷ்டிக்கு அதிகப்பட்டதாகவே இருந்து வந்தது. ஆகவே அவள் சம்பூர்ணமான செல்வங்களுக்கு உரியவளாக இருந்தும், பக்குவ காலப் பெண்ணாக இருந்தும், தேகத்திற்கு உழைப்பைக் கொடுக்காமல் மூளைக்கு மாத்திரம் அதிக உழைப்பைக் கொடுத்து வந்ததால், அவள் ஊதினால் பறக்கும் தன்மை உடைய புஷ்ப இதழ் போலச் சிறிதும் பலம் இன்றி அழகொன்றையே உடையவளாய்க் காணப்பட்டாள். அந்த யெளவன மடந்தை அதிகமான ஆபரணங்களை அணியாமல், மிதமாகவே அலங்காரம் செய்து கொண்டிருந்தாள். அவளது காதுகளில் வைரக் கம்மல்கள் இருந்தன. மூக்கில் வைரத் திருகுகள் காணப்பட்டன. ஓயாமல் படித்துப் படித்துக் கண்களின் சக்தி குறைவுபட்டுப் போனமையால், அவளது முகத்தில் தங்க மூக்குக் கண்ணாடிகள் ஜ்வலித்துக் கொண்டிருந்தன. கைகளில் இரண்டு தங்க வளையல்களும், கழுத்தில் நல்ல முத்துமாலை ஒன்றும், உள்ளங் கழுத்தில் வைர அட்டிகை ஒன்றும் காணப்பட்டன. இடுப்பில் தங்க ஒட்டியானமும், மணிக்கட்டில் கைக்கடியாரம் ஒன்றும் தவறாமல் எப்போதும் இருந்து வந்தன. அவள் கட்டிலில் இருந்து கால்களை ஊன்றிக் கீழே இறங்கினால், அடியில் ஆயத்தமாகக் கிடந்த வெல்வெட்டு சிலிப்பரை மாட்டிக் கொண்டுதான் அவள் காலை அப்பால் எடுத்துவைப்பாள். அவள் அணிந்திருந்தது வெள்ளை வெளேரென்று துல்லியமாக வெளுத்திருந்த மஸ்லின் சேலையானாலும், அதன் தலைப்புகளிலும், ஒரங்களிலும், ஜரிகை