பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

189

அதை எடுத்துக் கொண்டு நீ போய், அந்த ஐயாவிடம் எனக்குத் திங்கட்கிழமை முக்கியமான ஒரு பரீட்சை இருக்கிறது. அதற்காக நான் அநேகம் புஸ்தகங்கள் படிக்க வேண்டும். திங்கள் கிழமைக்குப் பிறகு ஒரு நாள் குறித்து எழுதினால் அன்று தயாராக இருக்கிறேன். இப்போது அவர்களோடு சம்பாஷிக்கும் படியான இன்பத்தை மறுக்க நேர்ந்ததைப்பற்றி வருந்துகிறேன். நான் அவர்களுக்கு என் நன்மதிப்பைத் தெரிவிப்பதற்கு அடையாளமாக இந்தப் படத்தைக் கொடுக்கச் சொன்னேன்’ என்று நீ சொல்லி, அவரிடம் இந்தப் படத்தைக் கொடுத்து அவர்களை அனுப்பிவை. திங்கட்கிழமைக்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்” என்று கூறிய வண்ணம் எழுந்து, பக்கத்தில் இருந்த மேஜையின் சொருகு பெட்டியைத் திறந்து அதற்குள் இருந்த தனது புகைப்படம் ஒன்றை எடுக்கத் தொடங்கினாள்.

அவள் தெரிவித்த முடிவு டலாயத்துக்கும் வேலைக்காரிக்கும் அவ்வளவு உசிதமானதாகத் தோன்றவில்லை ஆதலால், அவர்கள் ஒருவரது முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். மனோன்மணியின் சொல்லுக்கு வேறாக நடக்க டலாயத்து அஞ்சினான் ஆதலால், அவன் மெளனமாக நின்றபடி வேலைக்காரிக்கு ஏதோ சைகை செய்தான். உடனே வேலைக்காரி நயமாகவும் பணிவாகவும் பேசத் தொடங்கி, “அம்மா! வந்திருக்கிறவர்கள் நம்முடைய புது சம்பந்திகளின் நெருங்கிய பந்துக்களாக இருக்கிறார்கள். நல்லகாலம் பார்த்து அவர்கள் பெண்னைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கிறார்கள். இது நல்ல சுபகாரியம்; இதைத் தடுப்பது அபசகுனம் போல் இருக்கும். அவர்கள் புதிய மனிதர்கள்; தங்களை நாம் அவமதித்ததாகவும் எண்ணிக் கொள்வார்கள். ஆகையால், வந்த மனிதருக்கு மரியாதை செய்யாமல் அவர்களை இப்படித் திருப்பி அனுப்புவது ஒழுங்கல்ல என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. எல்லாவற்றிற்கும் நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள். இதோ டெலிபோன் இருக்கிறதல்லவா. இதை எடுத்து கச்சேரியில் இருக்கும் பெரிய எஜமானரைக் கூப்பிட்டு இன்னார் வந்திருக்கிறார்கள் என்ற சங்கதியையும், நீங்கள் செய்ய உத்தேசிக்கும் காரியத்தையும் அவர்களுக்குத் தெரிவியுங்கள்.